படித்தவர்களிடம் கூட போதிய சட்ட அறிவு இன்மையால், வழக்குரைஞர்களிடம் சிக்கி நீதி கிட்டாமல் நிம்மதி இழப்பதையும், சட்டத் திரித்தல் மலிந்து அநீதிக்குச் சாதகமாக தீர்ப்புகள் உள்ளதையும் உதாரணங்களோடு வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நுால். நீதிமன்றங்களில் பெற்ற அனுபவங்களைத் தொகுத்தளித்திருக்கிறார். அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொதுநல வழக்குகள் தொடர்ந்த போது கிட்டிய அவமானங்களை கேள்விகளால் ஆராய்ந்துள்ளார். சட்டப்பிரிவுகளின் இருள் பொதிந்த இடைவெளிகளை வெளிச்சம் போட்டுக்காட்ட முற்படுவதோடு, அறம் சார்ந்த எடுத்துக்காட்டுகளும் கையாளப்பட்டுள்ளன.
அனைத்து தரப்பினரும் தவறு, கால தாமதம், சேவைக் குறைபாடுகளுக்காக தண்டிக்கப்படும் பொது, நீதித்துறை மட்டும் தவறான தீர்ப்புகளுக்காகத் தண்டிக்கப்படுவதில்லை என்ற கருத்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நீதிபதிகளை விமர்சனம் செய்வோர் அவமதிப்பு வழக்கில் சிக்குவதையும், நீதியைத் தேடி வரும் பாமரர்கள் வாய்தா, உறுதியற்ற தீர்ப்பு, மேல்முறையீடு என அலைச்சலுக்கு உள்ளாவதையும், நீதிபதி தேர்வு முறையில் உள்ள குறைகளையும் துணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை சுதந்திரமானது எனும் கருத்துக்கு மாற்றுக் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. தனிநபர் சார்ந்த பொது உரிமைகளையும், பொதுநலன் சார்ந்த அரசின் கொள்கைகளையும் நேர்த்தியாக வேறுபடுத்தியுள்ளார். நேர்மையற்ற தீர்ப்புகள், தண்டனைகள், பாரபட்சங்கள் பற்றி அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். காந்தி கொலை வழக்கு, ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, ஜல்லிக்கட்டு வழக்கு போன்றவை மீள்பார்வைக்கு உள்ளாகியுள்ளன. பொது அறத்துக்கான விளக்கங்கள், திருக்குறள் மேற்கோள்களோடு விரிவாகத் தரப்பட்டுள்ளன.
நீதித்துறையின் தற்காலச் செயல்பாட்டின் மீது, புதிய பார்வையுடன் அணுகி எழுதப்பட்டுள்ளது. பொதுநலச் சட்டங்களை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு