மனிதர்களாக பிறந்து மகான்களாக வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர்களின் அனுக்கிரகத்தை விவரிக்கிறது இந்நுால்.
ரமணராக வாழ்ந்த வெங்கட்ராமன், பாம்பன் சுவாமிகளாக வாழ்ந்த அப்பாவு, தட்சிணாமூர்த்தியாக வாழ்ந்த அருணாச்சலம், விட்டோபாவாக வாழ்ந்த லோதா, சமகால துறவிகள் சேஷாத்திரி, பட்டினத்தார் ஆகியோரின் இறை பக்தியை அழகாக விளக்கி உள்ளார்.
மகான் என்பது மக்கள் உடனே கொடுத்து விட்ட பட்டம் அல்ல. சமுதாயத்தில் அனைத்தையும் துறந்து, ஏளனத்தை அனுபவித்து, துன்பப்பட்டு வழிப்போக்கர்களாக வாழ்ந்து, மகான்களாக மக்கள் ஏற்றுக் கொண்ட கதை மனதை கரைக்கிறது.
மனிதனுக்கும் மகானுக்குமான இடைவெளி மிக நீண்டது. அதை கடப்பதற்கு இறையருள் வேண்டும். அந்த இறையருள் பெற்றவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்வதும், அவர்களது வாழ்க்கை கதையை படிப்பதும் இறையருளைப் பெற்றதுக்கு சமமே.
அலங்காரமில்லாத ஆற்றுநீர் போல வார்த்தை ஜாலமின்றி மிக எளிமையான வார்த்தைகளால் நம் பிறவிப்பயனை கடக்க உதவுகிறார், நுாலாசிரியர் சரவணக்குமார்.
– எம்.எம்.ஜெ.,