‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய கனவுகளில் ஆழ்ந்த கருத்தை சிந்தித்தவர். இந்திய அளவிலும், உலக அளவிலும் அவரது ஆய்வுகளுக்கு வரவேற்பு இருந்துள்ளது.
இந்த நுாலில், 18ம் நுாற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை மிகவும் விரிவாக ஆவணங்களின் தரவுகளோடு எடுத்துரைக்கிறார்.
கணிதவியல், வானவியல் சிறந்திருந்ததை பிரிட்டிஷார் ஆவணங்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும்போது, பெருமையை உணர்கிறோம். இந்தியாவில் வான் ஆராய்ச்சியின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விரிவாக எடுத்துரைக்கும் ஆசிரியர், அதன் ஒவ்வொரு செயற்பாட்டையும் விளக்கும் முறை பாராட்டுக்குரியது.
பியர்ஸ் ஆய்வுக் கட்டுரை வழியே ஹிந்துகளுக்கும், அரேபியர்களுக்கும் அபாரமான வானவியல் அறிவு இருந்துள்ளதை காட்டுகிறார். சனி கிரகம் வானவியல் மரபில் ஏழு கரங்கள் கொண்டதாக சித்திரிக்கப்பட்டதை எண்ணி வியக்கிறார். அம்மை நோய்க்கு இந்தியர் சிகிச்சை முறை, ஐரோப்பியரை வியக்க வைத்திருக்கிறது. இந்துஸ்தானின் விதைக் கலப்பை தொழில் நுட்பம், ஐரோப்பிய கலப்பை தொழில் நுட்பத்தை விட சிறந்தது.
இந்துஸ்தானின் இரும்பு, ஐரோப்பிய இரும்பை விட தரத்தில் உயர்ந்தது. இப்படி இந்தியாவில் இருந்த பாரம்பரிய நுட்பங்களை, பல்வேறு வகையான செய்திகளை ஆராய்ச்சித் தரவுகள் வழி விளக்கியுள்ளார். மெட்ராஸ் சாந்து கலவை மிகவும் ஆர்வமூட்டும் பொருளாக இருந்திருப்பதோடு, கட்டுமானத்திற்கு அது பயன்பட்ட விதத்தையும் விரிவாக குறிப்பிடுகிறார். பெரியம்மை நோய் தடுப்பு சிகிச்சையை இந்தியாவிலிருந்து தான் சீனர்கள் மேற்கொண்டனர் என்கிறார்.
காகித உற்பத்தி, சணல் உற்பத்தி பற்றியும், இந்திய விவசாயம் பற்றியும், தென் மாநிலங்களில் தேனிரும்பு தயாரிப்பு, மேற்கு மாநிலங்களில் தொழில் நுட்பம் முதலானவற்றைப் பற்றி தக்க விளக்கங்களோடு எழுதிச் செல்கிறார்.
அடிக்குறிப்புகள் நுாலுக்கு அரணாகத் திகழ்கின்றன. மொழிபெயர்ப்பு, எல்லாரும் படிக்கும் வகையில் எளிமையாக உள்ளது. இந்தியபாரம்பரிய நுட்பத்தை அறிய உதவும் நுால்.
– ராம.குருநாதன்