அரபி மொழியில் எழுதித் தொகுக்கப்பட்ட, ‘ஸஹீஹுல் புகாரீ’ என்ற நுாலின் தமிழாக்கப் பதிப்பு நுால். தேர்ந்த வல்லுனர் குழு மொழிபெயர்த்து, சரி பார்த்து, ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாகமும் தனித்தனி புத்தகங்கள். தரமான காகிதத்தில் மிகத் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. பலமுறை நுாலைப் புரட்டினாலும், சேதம் ஏற்படாத வகையில் கெட்டி அட்டையில் கவனமுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
மூல நுாலில் உள்ள அரபு அருஞ்சொற்களை விளக்கும் வகையில், தமிழில் சிறப்பான கலைச்சொற்கள் விரிவாக்கத்துடன் தரப்பட்டுள்ளன. பொருள் அட்டவணை, பக்க விளக்கத்துடன் தனியாக தரப்பட்டுள்ளது. இது, நுாலின் குறிப்பிட்ட பகுதியை, எளிதாக தேடிப் படிக்க உதவும்.
நபி மொழி இயல் ஓர் அறிமுகம் எனத் துவங்குகிறது முதல் பாகம். எளிய தமிழ் சொற்களில், அரபு மூலத்தில் உள்ள கருத்து மாறுபடாமல் தகுந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்து உள்ளது. உரிய இடங்களில், அடிக்குறிப்பும், விளக்கமும் தரப்பட்டு உள்ளன. இவை, நுாலில் உள்ள கருத்துகள், வரலாற்று ரீதியாக விளங்கவும் ஏதுவாக அமைந்துள்ளன.
நுாலை தொகுத்த இமாம் புகாரீயின் வாழ்க்கை குறிப்பு, தனியாக தரப்பட்டுள்ளது. அவர் கல்வி பயின்ற நாடுகள் குறித்த வரைபடமும் இடம் பெற்றுள்ளது. புத்தகத்தில் மொத்தம், 7,563 பொன்மொழிகள் உரிய விளக்கத்துடன், பாட எண் வாரியாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான அரபு மூலமும் பொருத்தமாக அருகிலேயே அச்சில் அமைக்கப்பட்டு உள்ளன. நபியின் போதனைகளை மூலக் கருத்து மாறாமல் அறிய உதவும் நுால்.
– அமுதன்