மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு கோரத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். தொடர் குண்டு வெடிப்பின்போது அதன் வலியை உணர்ந்து படைத்துள்ளார். நாவல் என்பது கற்பனைக்குள் அடங்குவது அல்ல. அது வரலாற்றை உள்ளடக்கியோ, சமூகத்தை உள்ளடக்கியோ, குடும்பத்தை உள்ளடக்கியோ தான் இயங்கும்.
அந்த இயக்கத்திற்கு சமகால வரலாற்றைத் தேர்ந்தெடுத்து வடிவம் தந்துள்ளார். பிதிர்வனம் என்னும் சொல்லுக்குச் சுடுகாடு என்னும் பொருளை வழங்கி விடுகிறார். பிதிர்தல் என்றால் உதிர்தல் எனப் பொருள் வழங்கியுள்ள முறைக்குள் ஒரு சொல்லாய்வாளர் உறைந்திருக்கிறார்.
குண்டு வெடிப்பின் நேரடி வருணனை போல் நாவலைத் துவங்கி மெல்ல மெல்ல விரைவு படுத்துகிறார். வேதாளம் என்னும் பாத்திரத்துடன் துவங்கி வேதாளத்துடனேயே நிறைவு செய்துள்ள தன்மையும், இடையிடையே வெளிப்படும் அங்கதம் கலந்த மொழி நடையும் தனி முகவரிகள் ஆகின்றன. எடுத்த வேகத்தில் படித்து முடிக்கத்தக்க விறு விறு நாவல்.
– முகிலை ராசபாண்டியன்