கிருஷ்ணரின் அவதார காலம் முதல், பாரதப் போர் முடிந்து தருமத்தை நிலைநாட்டிய வரை விந்தைகளை தரவு கொச்சகக் கலிப்பா வடிவில் இனிய சந்த பாடல்கள் கொண்ட நுால். எதுகை, மோனைகள், உவமைகள் பொதிந்த சந்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. துவக்கத்தில் வட மதுரையின் சிறப்புரைக்கும் பாடல்களில், கண்ணனின் இளம் பருவப் பெருமைகள், சிறையில் தேவகியின் துன்பம், பூதகியின் சதி, ஆயர்பாடியில் வளர்ப்பு, கண்ணன் விளையாட்டு, கம்சனின் மரணம், குருகுல வாசம், இளமை துள்ளும் கோபியர் களியாட்டங்கள், ருக்குமணி திருமணம் ஆகியவை விறுவிறுப்பு கூட்டுகின்றன.
அறத்தை வலியுறுத்தும் கீதையின் வரிகளையும் அங்கங்கே புகுத்திப் பாடியிருப்பது சிறப்பு. போர்க்களத்தில் கர்ணன் மாய்ந்த பின்கண்ணன் காட்சி தந்து பொழியும் அறவுரை மனதைக் கவரும். புராணக் கதைகளின் அடிப்படையில் பாடப்பட்டுள்ளது. பாரதப்போருக்குப் படை திரட்டல், அபிமன்யு வதம், கர்ணன் இறப்பு, தருமன் முடிசூடல் என நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ள நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு