திகட்டா எழுத்துக்கு சொந்தக்காரர் தி.ஜானகிராமன். அவரின் 50 சிறுகதைகளை தேர்வு செய்து, அதில் அவர் வெளிப்படுத்தி இருக்கும் ஆளுமையை, அழகியலை, கூர்நோக்கை விவரித்துள்ள நுால். சமதளம் தொட்ட நீரோடையைப் போல மிருதுவாக பயணிக்கும் தி.ஜா.,வின் கதைகளில், திடுதிடுமென சில சொல்லாடல்களும், உவமானங்களும் மின்னலடிக்கும். வாசிப்பின் வேகத்தில் நின்று நிதானித்து, அவற்றில் லயிக்க தவறியிருப்போம்.
அந்த கணங்களை இதில் மேற்கோளிட்டு காட்டுகையில், மீண்டும் அந்த முழுக் கதைகளைத் தேடிப்பிடித்து மூழ்கத் தோன்றுகிறது. இதில், 50 சிறுகதைகள் அலசப்பட்டுள்ளன. பம்மிப் பதுங்கும் ஒருவனை, பதவியும் அதிகாரமும் எப்படி பராக்கிரமசாலியாக மாற்றுகிறது என்பதை, ‘கடைசி மணி’ கதையிலும், தம்பதியின் மனஸ்தாபம் இறப்புக்குப் பின் உயிர் அறுக்கும் என்பதை, ‘மறதி’ கதையிலும் சொல்லி இருப்பார்.
அந்தக் கதையில், தன்னழுத்தத்தால் தவிக்கும் கணவன், ‘தினமும் 8 மைல் வெயிலில் நடக்கிறதை விட பெரிய போதை உண்டா என்ன’ என, தவறுக்கான சுய தண்டனையை, பாவ மன்னிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்தப் புத்தகம், நல்ல கதைகள் தேடுவோருக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
– பெருந்துறையான்