ஐம்பெருங் காப்பியங்களில் காணக் கிடக்கும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அழகுபடக் கூறியுள்ள நுால். தமிழரின் சமுதாயக் கட்டமைப்பு, அரசியல் நிர்வாகம், நீதி நெறிகள், குடும்ப உறவுகள், விளையாட்டுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், கலைகள், விழுமியங்கள் மேற்கோள் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டு உள்ளன.
குடிமக்கள் ஆறில் ஒரு பங்கு அரசுக்கு வரி செலுத்தியதை சீவகசிந்தாமணி கூறுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது வரி வேண்டாமென, திறை விலக்கு அளித்து உள்ளான். கோவில் செலவுகளுக்காக வரியில்லா நிலங்கள் அளித்ததை சிலப்பதிகாரம் சொல்கிறது.
பிறந்த குழந்தைக்கு சாதகம் கணிப்பதும், சோதிடப்படி திருமணம் செய்வதும், மாமன் மகளை மணப்பதும், தனிக் குடித்தனம் வைப்பதும், வளம் சிறப்பதும், கணவனையே கடவுளாகத் தொழுவதும், உடன்கட்டை ஏறுவதும் அக்கால வழக்கில் இருந்ததை அறிய முடிகிறது.
மந்திரங்களுக்கு மகாசக்தி இருந்ததாக சிலம்பும், மேகலையும், சிந்தாமணியும் சொல்கின்றன. முருகன், சிவன், திருமால், கொற்றவை, இந்திரன், மன்மதன், புத்தர், மகாவீரர் ஆகிய கடவுளரும், அவர்தம் கோவில்களும், பூசைகளும், திருவிழாக்களும் காப்பிய காலத்தில் இருந்ததை நிறுவி உள்ளார். பழந்தமிழர் வாழ்வியல் முறைகளை, ஐம்பெருங்காப்பிய ஆதாரங்கள் கொண்டு எழுதப்பட்ட ஆய்வு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்