பக்தி பாடல்களை கொண்ட தொகுப்பு நுால். இசையுடன் பாட ஏற்றவை. ஐயனை மட்டுமின்றி அம்மையையும் நினைத்துப் போற்றும் பாடல்களை தந்துள்ளது. ‘ஐந்தெழுத்து மந்திரத்தை ஆர்வமுடன் நெஞ்சில் ஏற்ற கிஞ்சித்தும் கவலை இல்லை தானே!
‘பற்றும் பாசமும் பசுபதியின் மேல் இருந்தால்’ முற்றும் துறந்த முனிவன் ஆக தேவை இல்லை தானே... அடியவர்க்கு சஞ்சலம் நீக்கி சிந்தை தெளிவித்து நஞ்சைத் தான் உண்டு நானிலம் காத்தவன் அவன் என்பது உண்மைதானே...’ என உருகிப் பாடியுள்ளார்.
‘இல்லாத ஏழை பசி என வரும் போது, தள்ளாமல் அவருக்கு தருவது தான் ஈசன் என்பதும் உண்மைதானே! எதிர்மறை எண்ணங்கள் மனதினிலே வந்துவிடாமல் சதுர்மறை நாயகனை சடுதியில் அருள்புரிய வேண்டினால் அருள் தருவதும் அவன் தானே...’ என அருள் மழை பொழியும் வகையில் எழுதியுள்ளார். பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகை பாடல்களை கொண்டுள்ளது. சிவனை முழுக்க சிந்தையில் அமர்த்தி ஆன்மிக வெள்ளம் பொங்க வைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்