கிரிக்கெட் மைதானத்தில் சந்திக்கும் இருவர், காதலாய் – கிரிக்கெட் பந்தாய் பறந்து செல்வது போன்று நயத்துடன் எழுதப்பட்டு உள்ள நாவல். ஒரே புத்தகத்தில் இரண்டு நாவல்களைக் கொண்டு உள்ளது. முக்கோணக் காதல் கதையில், முதல் இருவரைச் சேர்த்து வைத்துவிட்டு, இரண்டாவதாக அறிமுகம் ஆனவரை மருத்துவத் துறையின் உச்சத்தில் காட்டப்பட்டுள்ளது. இது, முதலில் உள்ள ‘அன்பே சுகமா?’ என்ற நாவலின் மையக் கருத்து.
இரண்டாம் நாவல், ‘நானே உனதானேன்’ என்ற தலைப்பில் உள்ளது. மொட்டை மாடியில் நிற்பவன், காதலிக்குப் புறாக்களை துாது விடுவதாக துவங்குகிறது. கேஷியராக வேலை பார்த்துக் கொண்டிருப்பவன், மேற்படிப்புக்காகப் பல்கலைக்கழகத்தில் சேர்கிறான். அங்கே படியேறும் போது தடுக்கி விழுகிறான். அப்போது நிகழும் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது காதல் வருகிறது. பல தடைகளைத் தாண்டி, இருவரும் திருமணம் செய்து கொள்வது போல் கதை முடிகிறது. ‘டிவி’ நிகழ்ச்சிகளை சேனல் மாற்றிப் பார்த்த சோர்வை அகற்றும் சுவாரசியமான நாவல்கள்.
– முகிலை ராசபாண்டியன்