வன்னி மரத்தை போற்றும் தியாக வரலாற்றை கூறும் நுால். ராஜஸ்தானில் அபாய்சிங் ரத்தோர், ஜோத்பூர் ராஜ்ய ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, 1730ல் ஆடம்பர பங்களா கட்ட திட்டமிட்டு, வன்னி மரங்கள் வெட்ட வீரர்கள் காட்டுக்குள் செல்கின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த அம்ரிதா தேவி என்ற பெண், ‘ஒரு மரத்தை காப்பாற்ற, மனித தலை சன்மானம் என்றால், என்னை வெட்டுங்கள்...’ என மரத்தை கட்டியணைக்கிறார். வீரனின் கோடாரி, மரத்தோடு அந்த பெண் தலையை வெட்டுகிறது. தொடர்ந்து அவரது மூன்று மகள்கள் உட்பட 363 பேர் வெட்டி சாய்க்கப்படுகின்றனர்.
இவர்களின் உயிர் தியாகத்தை அறிந்த மன்னன், கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். பின், அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, மரம், விலங்குகளுக்கு ஊறு விளைவிக்கும் செயலுக்கு தடை விதிக்கிறார். இந்த சட்டம் அங்கு நடைமுறையில் உள்ளது. படுகொலை நடந்த இடம், புனித யாத்திரிகையாகவும், வருடாந்திர விழாவாகவும் சிறப்பிக்கப்படுகிறது. சூழலியல் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்