திருமாலும், பிரம்மனும், விஸ்வரூபம் எடுத்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணச் சென்ற கதை தானே இது என எண்ணத் தோன்றும். ஆனால், உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் அரி, சிவன் திருவிளையாடல்கள் வழியாக விளக்கப்பட்டுள்ள நுால்.
சிறுகதை வழியே எளிமையாக மனதில் பதியும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது. தன் இடையால் சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியத்தைத் துாண்டும். ராதையின் அன்பை உணர்த்த வயிற்று வலி நாடகமாடிய பெருமாள், பாவாஜி என்ற பக்தருடன் தாயக்கட்டை ஆடிய அழகு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
வாயால் அதிசயம் செய்த கண்ணன், வாயால் கெட்ட கைகேயி, மாயூரத்தில் முனிவரின் கை நீளாத அதிசயம், பிட்டு விற்று பிழைத்த கிழவிக்காக மண் சுமக்க வந்த ஈசனின் கருணை, முதுகில் பிரம்படி பட்ட பேரன்பு, திருவாலங்காட்டில் நடனமாடும் போது காலால் காது குண்டலத்தை நக்கி எடுத்த சிவ பெருமான் லீலையை, திருமயிலையில் தறி நெய்தவாறு மனக்கண்ணால் கண்ட திருவள்ளுவர்.
தருமிக்கு 1,000 பொற்காசுகள் தேவை தான். எதற்காக அந்த தேவை என்பதை விளக்குமிடம் அருமை. இதையெல்லாம் படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
–
எம்.எம்.ஜெ.,