தமிழ்வாணனின் எழுத்துப்பணியின் உன்னதத்தை சொல்லும் நுால். சுவையான நாவல் படிப்பது போல் நிறைவு கிடைக்கிறது. எழுத்தாளர் என்றால் பைஜாமா, சோல்னா பை என்ற அடிப்படையை தகர்த்தவர் தமிழ்வாணன். கறுப்பு கண்ணாடி, தொப்பி என்று கம்பீரமாக உலா வந்தார்.
கருத்துக்களையும் உலா வர வைத்தார். இவற்றை அழுத்தம் திருத்தமாக பதிவிட்டுள்ளது. ‘தற்கொலைக்கு தடா’ என்ற கட்டுரை திரும்பத் திரும்ப படிக்க துாண்டுகிறது. கீச்சு குரலால் மனம் உடைந்த சிறுவனை ஆற்றுப்படுத்தியது மிக அருமை.
அந்த சிறுவன் வளர்ந்த பின், 30 கோடி ரூபாயை பொது நலனுக்காக வழங்கினார். அவர் தான், சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் என மலைப்பு ஏற்படுத்துகிறது. கேரளா வாசகரின் பெயரான சங்கர்லால் என்பதை தான் படைத்து வாழ விட்ட கதாபாத்திரத்திற்கு சூட்டினார் என்பது அற்புத செய்தி. மனிதன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை சொல்லும் நுால்.
–
சீத்தலைச் சாத்தன்