வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். நல்லவை, அல்லவை மட்டும் அல்ல, வாழ்க்கையில் அவசியம் பின்பற்ற வேண்டியவற்றையும் பிறர் பாதச் சுவடுகளில் இருந்து கற்க முடியும்.
வெற்றி பெற்ற ஒருவரை, ‘அவருக்கு என்ன... பேரும் புகழும், போதிய பணமும் இருக்கிறது’ என ஒற்றை வரியில் சொல்லி விடுவோம். ஆனால், அதில் அடங்கக் கூடியதா வாழ்க்கை. அவர் பெற்றது, இழந்தது என நிறைய இருக்கும்.
புகழின் உச்சியில் இருக்கும் சிலரின் வாழ்க்கைப் பக்கங்கள் இந்த நுாலில் இருக்கின்றன. அவர்கள், ஒவ்வொரு படியாக ஏறி வருவதற்கு என்ன போராட்டங்களை, துயரங்களை, வலியை சந்தித்தனர் என்பதை கதை போல் சொல்லியுள்ளனர்.
சிறுவயதில் மிட்டாய் வாங்கிய போது தவறுதலாய் விரல் பட்டதற்காக திட்டு வாங்கிய சிறுவன், இன்று யாராக இருக்கக் கூடும்... மருத்துவமனையில் உயிர் பிரிய இருந்த சிசுவை காப்பாற்ற, துறைத்தலைவரிடம் ஓடிய பயிற்சி மருத்துவர், இன்று என்னவாக இருக்கிறார்...
இதிகாசங்களில் எத்தனையோ பெண் நாயகியர் இருக்க, சூர்ப்பனகையை தேர்வு செய்து, நடனமாடிய நாட்டிய நங்கை யார்... இது போல் பலரின் அனுபவங்களை அறிய உதவும் நுால்.
– லலிதா