கும்பகர்ணனின் வீரம், பாசம், தன்மானம் போன்ற பண்புள்ள நீதிமானாக விளங்கினான் என்பதை வசனக் கவிதை வடிவில் தரும் நுால். ‘அழகிய நம் தீவு அழிந்து கொண்டிருக்கிறது; என் அன்பு தம்பியே! நீ களமுனைக்குச் சென்று வென்று மீள்வாயாக’ என ராவணன் கூறிய போது, கும்பகர்ணனின் அறச்சினம் வெளிப்படுவதை, ‘திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ’ எனச் சீதையின் மேன்மையை உரைக்கிறது.
அதை செவிமடுக்காத ராவணனுக்காக போர்க்களம் நோக்கிப் புயலாக புறப்பட்டான் என கும்பகர்ணன் வீரத்தை விளக்குகிறது. சாவென வந்தால், போரில் வீர சொர்க்கம் புகுதலே மேலெனக் கொண்ட கும்பகர்ணன், ‘இறப்பைக் கண்டு நான் அஞ்சவில்லை; மூக்கறுந்த என் முகத்தை எவரும் பார்க்கா வண்ணம், கழுத்தை அறுத்து கடலுக்குள் மறைத்துவிடு’ என வேண்டியதாக பதிவிட்டுள்ளது. கும்பகர்ணனை, தர்மத்தின் நாயகனாக சித்தரிக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்