ஜாதக அலங்காரத்தில் கூறப்பட்டுள்ள ஜோதிட உண்மைகளை திரட்டி தரும் நுால். லக்கனம், தனபீடம், சகோதர பீடம் என, பன்னிரு பாவங்களும், கிரக சீலமும் பாவ கிரகங்களும், சுப கிரகங்களில் ஜனனித்த குழந்தைகளுக்கு ஏற்படும் பலன்கள், பொதுவான நட்சத்திர பலன்களும், நட்சத்திர பாத பலன்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ராஜயோகம், தரித்திர யோகம், கிரக சேர்க்கை பலன்கள் ஆகியவை கூறப்பட்டுள்ளன. சனி பகவான் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசியில் சஞ்சரித்தால் ஆண் குழந்தையும், செவ்வாய் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் சஞ்சரித்தால் பெண் குழந்தையும் பிறக்கக் கூடும் என்கிறது.
லக்கனம் முதலான பன்னிரு பாவங்கள், கிரகங்களின் நட்பு, பகை, ஆட்சி, உச்சம், நீசம் போன்ற விபரங்களும், ராசிகளின் நிறம் மற்றும் உருவமும் கூறப்பட்டுள்ளன. சோதிட கலையில் ஆர்வம் உள்ளோருக்கு பயனுள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்