சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இயற்கையின் வரங்களாக போற்றப்படும் மரம் வளர்ப்பதை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘மரம் நட விரும்பு’ என துவங்கி, ‘பூவரச மரமும் பூஞ்சிட்டுக் குருவிகளும்’ என முடியும், 11 தலைப்புகளில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. எவர்சில்வர் மூலப்பொருளில், மாட்டு வண்டி தயாரித்து மரம் பயன்பாட்டை தடுக்கும், ‘ஓரம்போ... ஓரம்போ... வண்டி வருது...’ மாற்று முயற்சியை சொல்கிறது.
காக்கை எச்சத்தில் விழுந்த மகிழம் விதை, பெரிய மரமாக வளர்ந்து குழந்தைகளுக்கு சுவை கொடுக்கிறது. பாகப்பிரிவினை சொத்தின் மையப் பகுதியில் மரம் நிற்கிறது. அதை வெட்டி பணம் பார்க்க அண்ணன் திட்டமிட, தம்பி மறுக்க மரம் காப்பாற்றப்படுகிறது. இதை, ஒரு கதை சாட்டையால் அடித்து சொல்கிறது. மகிழ மரம் மகிழ்ச்சியில் தலையாட்டுகிறது. ஒவ்வொரு கதையும் மரங்களின் பாதுகாப்பை உணர்த்துகிறது.
– டி.எஸ்.ராயன்