ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பின் இரண்டாவது புத்தகம் உயிரியல் கடிகாரம். இந்த முறை அவர் தன் கற்பனையை பறக்கவிடவில்லை. விண்வெளியை நோக்கி செயற்கைக்கோளாய் ஏவியிருக்கிறார். மனித ஜீனுக்குள், சேவலின் ஜீனை பொருத்தினால் என்னவாகும்? கதை வழியே மிரட்டுகிறார். தீவிரவாதிகளை சுட்டு பொசுக்கும் அசகாய சூரன் விவேக், ஆய்வக லேப் சிலைடில் காட்சிப் பொருளாய் ஒட்டப்படும் பரிதாபம்... அடடே என வியப்பை ஏற்படுத்துகிறது.
பெண் பார்க்க செல்லும் சுதாகரன், முற்பிறவி ஞாபகத்தால் அலைக்கழியும் மதுமிதாவிடம் மனதை பறிகொடுத்து விபத்தில் பலியாகும் கதை. இது, 48வது பிறவி தொடர்கதை என நம்மை அதிர வைக்கிறார்.
இதிலுள்ள 23 கதைகளும் 23 ‘ட்விஸ்ட்’களுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பயணிக்கின்றன. அத்தனையும் படு சுவாரசியம். கிரைம், திரில்லர், சயின்ஸ் ஆர்வத்திற்கு தீனி போடுகிறது. கொஞ்சம் பயமுறுத்தும், கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும்.
–
எம்.எம்.ஜெ.,