நாவலை படித்து முடித்த பிறகு தான் எத்தனை பொருத்தமான தலைப்பு என்று புரிகிறது. இளம் வயதில் எத்தனையோ ஆசைகள் இருக்கும். குடும்ப பொறுப்பில் அவற்றை எல்லாம் பெரும்பாலானோர் மறந்திருப்பர். பொறுப்பு முடிந்து பணி ஓய்வுக்குப் பின், அவை தலையெடுக்கக் கூடும். அது தான் சாயங்கால உதயம்.
நடிகன் ஆக கனவு கண்டவர் சதாசிவம். தங்கைகளை படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார். தன் திருமணத்திற்கு பின் மகனை படிக்க வைக்கும் கனவு, மத்திம வயதில் சொந்த வீடு கட்டும் கனவு எல்லாம் முடிந்து அக்கடா என்று உட்காரும்போது பணி ஓய்வு. இப்படி போகிறது கதை. இனி இஷ்டப்படி வாழ எடுத்த முடிவு ஜெயிக்குமா என்பதை கதைப்போக்கு கச்சிதமாக சொல்லும் நாவல்.
– சீத்தலைச் சாத்தன்