விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கருவாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.
படிக்க வேண்டிய வயதில் மகனை வாத்து மேய்க்க அனுப்பி விட்டு, படிப்பு ஏறவில்லை என நியாயப்படுத்தும் தந்தையைப் பற்றிய கதை உருக்கம் தருகிறது. மருமகள் கொடுத்த பழைய சட்டையை, ஏழை சிறுவனிடம் இருந்து பறித்து ஏளனப்படுத்தும் கொடூர மாமியார் பற்றியது மிகவும் வித்தியாசமாக உள்ளது.
தாத்தாவின் கனவை மகள் மூலம் நிறைவேற்றியவர், மரக்கன்று நட மிகவும் பிரயாசைப்பட்ட சிறுவனின் பிஞ்சு மனதை ரணப்படுத்திய வீட்டுக்காரன் இப்படி வண்ணங்களால் ஜொலிக்கிறது. ஊருக்கும், சேரிக்கும் இடைவெளி குறையவில்லை என்பதை விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்