தமிழிலக்கியத்தின் அதிசயம் என திருமந்திரத்தைக் கூறலாம். வடமொழி இதிகாசங்களில் ராமாயணத்தை விநாயகர் எழுத, வால்மீகி ‘டிக்டேட்’ செய்த செவிவழி செய்தியை அறிவோம்.
‘நான் எழுதும் வேகத்துக்கு, நீ ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்; நிறுத்தினால், எழுதுவதை நான் நிறுத்தி விடுவேன்...’ என்றாராம் விநாயகர்.
திருமந்திரத்தில் என்ன அதிசயம் என்றால், ஆண்டுக்கு ஒன்றாக பாடல்களை எழுதினாராம் திருமூலர். உண்மையில், திருமந்திரத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டு. நமக்கு கிடைத்தது 3,100 பாடல்கள் தான். அப்படியானால், அதிக காலம் உயிர் வாழ்ந்த புலவர் திருமூலர். அவர் தெய்வப்பிறவி என்பதால் இது சாத்தியமாயிற்று.
இந்த அரிய நுாலில் இருந்து பொறுக்கியெடுத்த நல்முத்தான பாடல்களுக்கு விளக்கமளித்துள்ளார் சுசர்ல.ரமணி. திருமந்திரத்தை படித்து புரிந்து கொள்வது கடுமையான பணி. அவ்வளவு எளிதில் அவற்றுக்கு விளக்கம்அளித்து விட முடியாது.
சைவ சித்தாந்தத்தை முழுமையாக உணர்ந்து, அஷ்டமா சித்தி, சரியை, கிரியை போன்ற யோகங்களை கற்றுத் தெளிந்தவர்கள் மட்டுமே விளக்கமளிக்க முடியும்.
அந்தப் பணி இந்த நுாலிலே செம்மையாக நடந்துள்ளது. உதாரணத்துக்கு 2,407ம் பாடலுக்குரிய விளக்கத்தைச் சொல்லலாம். மனித உயிர்கள் குடத்தில் இட்ட விளக்காய் உள்ளது.
எதை விட்டால், குன்றின் மேலிட்ட விளக்காகத் திகழலாம் என்பதற்குரிய விளக்கத்தை ஆசிரியர் மிக எளிமையாய் விளக்கியுள்ளார்.
ஆன்மிகத்தில் கடுமையான பகுதியை எளிமையாக்கித் தருவது என்பது சாதாரண விஷயமல்ல. அதை திறம்படச் செய்துள்ளார் நுாலாசிரியர். திருமந்திரப் பிரியர்கள் இந்த நுாலை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
– தி.செல்லப்பா