திரைப்பட நடிகர் நாகேஷ் ஒரு அற்புதமான கலைஞர். இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களெல்லாம், ஏதாவது பேசித் தான் சிரிப்பை வரவழைக்க முயற்சிப்பர். ஆனால், திரையில் தோன்றியதுமே, அரங்கத்தை சிரிப்பலையால் அதிர வைத்த பெருமை நாகேஷுக்கு மட்டுமே உண்டு.
வில்லாய் வளைவார்; அதே வேகத்தில் நிமிர்வார்; தரையில் தவழ்வார்; அந்தரத்தில் உயர்வார். இன்னும் என்னவெல்லாமோ வித்தைகள். இவை, நாகேஷுக்கு மட்டுமே வரும் அற்புதக்கலை. இவர் நடித்த திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் 60 படங்களை தேர்ந்தெடுத்து, அவர் நிகழ்த்திய நகைச்சுவை விளையாட்டு அழகுபட தொகுக்கப்பட்டுள்ளது.
திருவிளையாடல் தருமியை மறக்க முடியுமா... காதலிக்க நேரமில்லை படத்தில் தந்தையிடம் திரைக்கதை சொல்லும் அழகே தனி; ரசிகர்களை திகில் கடலில் ஆழ்த்தி விடுவார். உத்தரவின்றி உள்ளே வா படத்தில் அடிக்கும் லுாட்டி கொஞ்சமல்ல. சர்வர் சுந்தரம் படத்தில் காபி டபராக்களை சுமந்து வரும் காட்சி சாதாரணமா என்ன... இது, புத்தகத்தின் அட்டைப்படமாக மிளிர்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர் என எல்லா முன்னணி நட்சத்திரங்களுக்கும் ‘டப்’ கொடுத்தவர்.
புத்தகத்தில் அவர் நடித்த காட்சிகளை வசனத்துடன் கோடிட்டு காட்டியிருப்பது, பழைய ரசிகர்களை, ‘டென்ட்’ கொட்டகைக்குள் அழைத்துச் செல்கிறது. இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கும், நாகேஷுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். விரசமில்லாத நகைச்சுவை சாதனையை, இக்கால இளைஞர்கள் ரசித்து பார்க்க வேண்டுகோளையும் ஆசிரியர் முன்வைத்துள்ளார்.
ஒரே மூச்சில் படிக்க வைத்த பிறகும், மீண்டும் படிக்கத் துாண்டும் நுால்.
– தி.செல்லப்பா