வனிதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17.
இந்நூலின் ஆசிரியர் "காகித மடிப்புகளில் கணிதம்' என்பதைப் பற்றி பல்வேறு தலைப் புகளில் ஏற்கனவே எழுதி வெளியிட்டவைகளை ஒன்று சேர்த்து காகித மடிப்பு, நிரூபணங்கள், கணித மேதைகளின் கண்ணீர் வரலாறு, மாணவரின் மனமகிழ்ச்சி என்ற நான்கு தலைப்புகளில் தொகுத்து கொடுத்திருப்பதை முன்னுரையில் சுட்டிக் காட்டுகிறார்.முதல் தலைப்பான மாணவரின் மனமகிழ்ச்சியில், கணிதம் எவ்வாறு கற் பிக்கப்பட வேண்டும், கற்றவை எவ் வாறு மேம்படுத்த வேண்டும் மற்றும் கணிதம் கற்பதால் ஏற்படும் நன்மைகளை கணித ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும் எனக் குறிப்பிடுகிறார்.காகித மடிப்பு - ஒரு எளிய விளக்கம் என்கிற இரண்டாவது தலைப்பில் விரிவாக காகித மடிப்பின் வளர்ச்சி, பயன் பாடுகள், அவசியம் என்பவற்றைக் கூறி எடுகோள்களை விளக்கி, அவற்றின் பயன்பாட்டையும் குறிப்பிடுகிறார். பலவிதமான வடிவ கணித கணக்குகளை காகித மடிப்பில், விளக்கும் எளிய முறைகளை படங்களுடன் அமைத்துள்ளார். இயற்கணிதத்தையும் காகித மடிப்பின் பயன்பாட்டைக் கூறி தேற்ற நிரூபணங்களையும், அருமையாக எடுத்துக் கூறியுள்ளார்."கணிதமும் கண்ணீரும்' என்ற தலைப்பில் பெரும் கணித மேதைகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோக நிகழ்ச்சிகளைத் தொகுத்துள்ளார். இதற்கு மாறாக ஆசிரியர், அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஏற்பட்ட வெற்றிகளையும், ஏற்றங்களையும் குறிப்பிட்டிருப்பின் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு உபயோகமாக இருந்திருக்கும். "புலன்வழிக் கற்றலில்' கணித மாதிரிகள், அறிவியலும் கணக்கும் மற்றும் சூத்திரங்களையும், புதிர்களையும் விளக்குகிறார். இந்நூலில் சிறப்பு ஒவ்வொரு தலைப்பின் கீழும் பழங்கால பாடல்களில் கணித சூத்திரங்களில் விளக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், வெவ்வேறு புதிர்களையும் குறிப்பிட்டு இருப்பதாகும். இந்நூல், எல்லா பள்ளிகளின் நூலகங்களிலும் இருக்க வேண்டிய முக்கிய நூலாகும்.