நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17.
இராம பிரானுக்கு திருமுடிசூட்டலுடன் கம்ப ராமாயணம் நிறைவுபெறும். ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டமும் சேர்த்து ஏழு காண்டங்களின் கதையும் உரைநடையில் சொல்லப்பட்டுள்ள இந்நூலுக்கு வைத்த தலைப்பு பொருந்துமா?
கதையில் ஆங்காங்கே, கம்ப ராமாயணப் பாடல்களும், திருக்குறள், அறநெறிச் சாரம் நூல்களின் மேற்கோள்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. குறைந்த கல்வியுடையவரும் படித்தறியத்தக்க எளிய நடையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பாகும். மற்றும் சிறிய சிறிய வாக்கியங்களில் கதை சொல்லுவது படிப்பவரின் சிரமத்தைக் குறைக்க ஏதுவாக அமைந்துள்ளது.குறிப்பிடத்தக்க இடங்களில் நயமான உரையாடல்களை ஆசிரியர் அமைத்துள்ளார். ஓரிடம்: சீதை, "என் மீது இரக்கமில்லா மனத்துடன் பாசமில்லாத உருக்கம் காட்டுகிறீர். என்னைத் தனியே விடுத்துக் காடு செல்லும்போது தங்களின் பிரிவினால் ஏற்படும் தீயைக் காட்டிலும் அங்குக் காட்டில் சூரியன் எரிக்கும் சூடு என்னைச் சுடுமோ?" என்றாள்.(`நும் பிரிவினும் சுடுமோ பெருங்காடு' - கம்பர்.)இராமாயணத்தை வசனத்தில் பாராயணம் செய்வதற்கு ஏற்றதொரு நூல் இது. கண்ணைக் கவரும் கட்டமைப்பில் மேலானதொருபதிப்பாக வெளியிட்ட பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.