அபிராமி பதிப்பகம், 17/7-பி, கொடிமரத் தெரு, ராயபுரம், சென்னை-13. (பக்கம்: 192. விலை: ரூ.45)
இரண்டு அடித் திருக்குறளும், நான்கு அடி நாலடியாரும், வாழ்வின் நாம் எடுத்து வைக்கும் ஒவ் வொரு அடிக்கும் வழியைக் காட்டுகிறது!
இந்நூலில் உள்ள 400 பாடல்களுக்கும் தெளிவுரை, கருத்துரை, முக்கிய இலக்கணக் குறிப்புகளோடு இந்த நூல் வெளிவந்துள்ளது. அறத்தின் இயல்பு, இளமை, செல்வம், உடல் நிலையற்ற தன்மைகள், கோபத்தின் ஆபத்து, துறவு, பொறுமை, பிறர் மனைவியை விரும்பும் பேதைமை, கல்வி, ஈகை, நட்பு, அறிவு, மானம், வறுமை, விலைமகளிர் இழிவு, குலமகளிர் உயர்வு இப்படிக் கருத்துக் குவியல்கள் ஏராளம். தன்னை உயர்த்திக் கொள்ளும் ஆளுமைத் திறன்கள் பற்றி ஆங்கில நூல்கள் ஆயிரமாய் இன்று விற்பனைக்கு வந்துள்ளன. 1300 ஆண்டுகளுக்கு முன்பே தன்னைத் தூக்கி நிறுத்துவதும், தன்னைக் கீழே தள்ளி மிதிப்பதும், தானே தான் வேறு யாரும் இல்லை என்னும் ஆளுமைத் திறன் வளர்ச்சியை நாலடியார் சொல்வதைக் கேளுங்கள்.
`நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்' -248.
படித்தவன் நேர்மையாளனாய் ஏழையாய் இருப்பதும், பணக்காரன் நல்ல மனம் இல்லாதவனாய் இருப்பதும், சரஸ்வதியும், லட்சுமியும் சேராமல் இருப்பது தான் காரணம் என்கிறார். `நாவின் கிழத்தி உறைதலால் சேராளே, பூவின் கிழத்தி புலந்து' (252).
அச்சு நெருக்கம் இன்றி, சில எழுத்துப் பிழைகளும் இன்றி பெரிய எழுத்தில் நூல் உருவாகியிருந்தால் மாணவர்களும் பெரிதும் விரும்பிப் படிப்பர்.