சித்திரம், 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. (பக்கம்:416.)
இயல், இசை, கூத்து என மூன்று பிரிவாக வளர்ந்த வரலாறு தமிழுக்கு உண்டு. இவற்றில் மூன்றாவதாக உள்ள கூத்துக்கலையின் ஒரு பகுதியாக விளங்கும் தெருக்கூத்தினை விளக்குகிறது, தமிழரின் கூத்தியல் எனும் இந்நூல்.
பதினான்கு தலைப்புகளில் தெருக்கூத்தினைத் தெள்ளத் தெளிவாக்குகிறது இந்த ஆய்வு நூல். தெருவில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் தெருக்கூத்து இல்லை.
குறவன் - குறத்தி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலான ஆட்டங்களும் தெருவில் நடப்பதால் இவற்றைத் தெருக்கூத்து என்று கூற இயலாது. கட்டை கட்டி ஆடும் மரபு நாடகமே தெருக்கூத்து என்று இந்நூல் விளக்கம் தருகிறது.
சிறு தெய்வ விழாக்களுடன் தொடர்புடையதாகத் தெருக்கூத்து விளங்குகிறது. பெரும்பான்மையான சிறு தெய்வ விழாக்கள் விவசாய வேலை இல்லாத வேளைகளில் நடைபெறும்.
இந்தக் காலமே தெருக்கூத்து நிகழ்த்தப்படும் காலமும் ஆகும். தெருக்கூத்து ஆடுவோர் ஆண்களாக இருப்பதன் காரணத்தையும் இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. கோவில் விழாக்களில் தொடர்ந்து கூத்தாட வேண்டியிருப்பதால், பெண்களுக்கு அந்த மூன்று நாட்கள் இடையூறாக இருப்பதால் ஆண்களே பெண் வேடம் தாங்கிக் கூத்தாடுகின்றனர்.
கட்டியங்காரன் எனும் கூத்துப் பாத்திரத்தின் பன்முகத் தன்மையை விளக்கும் இந்நூல், கூத்தாடும் அரங்கம் பற்றிய செய்திகளையும் தொகுத்துத் தருகிறது.
பல கோவில் விழாக்களில் கூத்துப் பார்த்தோரும் இதுவரை கூத்துக் கலையினைப் பார்க்க வாய்ப்பில்லாதவரும் இந்நூலைப் படித்தால் தெருக்கூத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று வியப்படையும் வகையில், தெருக்கூத்தின் சுரங்கமாக இந்நூல் அமைந்துள்ளது.