பதிப்பாசிரியர்: இரா.குமரவேலன். வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 728.)
"தமிழ் மறை' என்று புகழப்படும் திருக்குறளுக்கு பல உரைகள் இதுவரை சிறிதும், பெரிதுமாக வந்துள்ளன. ஆனால், தற்போது முற்றிலும் புதுப்புது கருத்துக்களைத் தாங்கிய புதிய உரையாக செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை வெளிவந்துள்ளது.
கடந்த 1936ல் கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி., எழுதிய உரை, 73 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்று வந்துள்ளது. தமிழ் மக்கள் செய்த தவப்பயனே ஆகும்.
தொல்காப்பியத்துக்கு முதல் உரை எழுதிய இளம்பூரணர் மீதும், திருக்குறளுக்கு முதலுரை எழுதிய மணக்குடவர் மேலும் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு.
அறப்பால், பொருட்பால், இன்பப்பால் என்று இவர் முப்பாலை வழங்குகிறார். கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை மூன்று அதிகாரங்களையும் இடைச்செருகல் என்று நீக்கி 130 அதிகாரங்களை வெளியிட்டுள்ளார். இடைப்பாயிரம் என்று மூன்று அதிகாரம் 30 குறளைத் தனிமைப்படுத்தி விட்டார்.
மிக விளக்கமாக மணக்குடவர் உரையை பெரும்பாலும் தழுவி, பதவுரை, அகல விருத்தியுரை, உதாரணப்பாடல்களோடு குறளை விளக்கி, இலக்கணக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார்.
"ஆகுல நீர பிற' என்ற குறளில் ஆகுலம் என்பதற்கு புதுமையாக "துன்பம்' என்று விளக்கம் தந்துள்ளார்.
மகளிருக்கு நிறைகாப்பே, சிறை காப்பினும் தலையாயது என்பதை விளக்க வளையாபதி, பழமொழி பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
"அழுக்காறாமை' என்று உள்ள அதிகாரத்தை "அழக்கறாமை' என்றும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்பதை நினைக்கக் "கெடும்' என்றும் மாற்றி எழுதியுள்ளார்.
கம்ப ராமாயணம், நாலடியார் போன்ற பல மேற்கோள்பாடல்களால் தன் புதுக்கருத்திற்கு மெருகூட்டியுள்ளார்.
மிகப் பெரிய இந்த வ.உ.சி., குறள் உரை தமிழ் இலக்கியத் தோட்டத்தில் பூத்த குறிஞ்சிமலர்! வ.உ.சி.,யின் ஆழமான, அகலமான தமிழறிவுக்கு மணிமகுடம்! திருக்குறள் பற்றி வந்துள்ள 20 உரைகளுக்குள் இணையற்ற புதிய இடம்!