முகப்பு » தமிழ்மொழி » தமிழாற்றுப்படை

தமிழாற்றுப்படை

விலைரூ.500

ஆசிரியர் : கவிஞர் வைரமுத்து

வெளியீடு: திருமகள் நிலையம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ்மொழியின் அகவை, 3,000 ஆண்டுகளுக்கும் மேல். அந்தத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர், இலக்கியம் படைத்தோர், நீதிநுால் செய்தோர், காப்பியம் கண்டோர், அறநுால் ஆக்கியோர், பேரிலக்கியமாய்ப் போரிலக்கியம் படைத்தோர், அடைபட்டுக் கிடந்த மொழிச் செல்வங்களை மீட்டெடுத்தோர், இதன் தொன்மையை ஆராய்ந்து அறிவித்தோர், சீர்திருத்தம் செய்து மொழியைச் செப்பனிட்டோர், தெய்வம் தொழுதோர், பகுத்தறிவு பரப்பியோர், பொதுவுடைமை பேசியோர், கலையிலும் அரசியலிலும் தமிழுக்குத் தகுதி தந்தோர் இப்படித் தமிழ்ப்பணி ஆற்றிய, 24 ஆளுமைகள் குறித்து, கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த, ‘தமிழாற்றுப்படை!’
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொல்காப்பியர், கபிலர், அப்பர், கம்பர், வள்ளலார், பாரதியார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதைய்யர், பாரதிதாசன், அண்ணாதுரை, கருணாநிதி, கண்ணதாசன், ஜெயகாந்தன் உள்ளிட்ட அனைவருமே தமிழின் உயரமறிந்தோர் மட்டுமல்லர்; அதன் ஆழ அகலங்களையும் நன்கறிந்தோர்.
தமிழில் அவர்கள் வினைப்பட்டதையும், தமிழ் அவர்களுக்கு வயப்பட்டதையும் காய்தல் உவத்தலின்றித் தன் கட்டுரைகளின் வழியே தமிழ்ச் சமூகத்தின் முன்காட்சிப்படுத்தி இருக்கிறார் கவிஞர்.
கம்பர் குறித்த கட்டுரையில், விசுவாமித்திர முனிவரின் ஆசிரமத்தை ராமன், இலக்குவன் இருவரும் கண்ணை இமை காப்பது போல் காவல் காக்கின்றனர் என கூறப்புகும் கம்பர், ‘கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்’ என்றுரைக்கிறார். ஆனால், அந்த ஒரு வரிக்குக் கவிஞர் விரித்துக் கூறும் மறைபொருள் இதுவரை கூறாதது.
அது போன்றே இளங்கோவடிகள் குறித்த கட்டுரையில், கணவனைப் பிரிந்து துயருறும் கண்ணகி, சோமகுண்டம் மற்றும் சூரியகுண்டம் என்ற பொய்கைகளில் மூழ்கிக் காமனை வழிபட்டால் கணவனோடு சேரலாம் என்று அவளின் தோழி கூறும் போது, அது பெருமையன்று எனும் பொருளில், ‘பீடன்று’ என்று கூறுகிறாள்.
அது ஏன் கண்ணகிக்குப் பெருமை என்று விளக்குகிறார் கவிஞர். தனக்கு உரிமையுள்ள ஆடவனை அடைய, மற்றோர் ஆடவனாகிய அது, கடவுளே ஆயினும் துணை எதற்கு என கண்ணகி கருதியிருக்கக்கூடும் என்கிறார். மேலும் ஒருபடி மேலே சென்று, காமன் என்பவன் சிவனால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி.
திருவள்ளுவர் கட்டுரையில், நட்புக்கு உவமை காட்ட வந்த வள்ளுவர், உடுக்கை இழந்தவன் கைபோல விரைந்து நண்பரின் துன்பத்தைத் துடைக்க வேண்டும் என்று கூறியதைக் குறிப்பிட்டு, இதில் எந்தவோர் ஆடையின் பெயரையோ, வடிவத்தையோ குறிப்பிடாது, ‘உடுக்கை’ என்ற பொதுப் பெயரால் வள்ளுவர் குறிப்பிடக் காரணம், உடைகள் காலத்தால் மாறக்கூடும். ஆனால், உடுத்தல் என்பது எக்காலத்தும் நிலைத்திருக்கும் பண்பாடு.
எனவே, மாறும் நாகரிகத்தைக் கூறாமல், மாறாப் பண்பாட்டைக் குறிப்பிட்டார் வள்ளுவர் என்று விளக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் கவிஞர். அப்பர் குறித்த கட்டுரையில், அவரின் வாழ்வை தமிழ் மீட்பு, சைவ மீட்பு, சமூக மீட்பு எனும் மூன்று தளங்களில் விரிவாக விளக்கியிருக்கும் ஆற்றல் பிரமிக்கத்தக்கது.
பெரியார் தன் முதல் துணைவி நாகம்மை மறைந்தபோது எழுதிய இரங்கல் அறிக்கையில், ‘பெண்கள் சுதந்திர விசயமாகவும் பெருமை விசயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நுாற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மை விசயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள, எனக்கு முழு யோக்கியதை இல்லை’ என்று குறிப்பிட்டிருப்பதும், எவரையும் எதனையும் பொருட்படுத்தாது மனதில் பட்டதை மறைக்காமல் உரைப்பதே மேன்மக்கள் இயல்பு என்பதனை பறைசாற்றுகின்றன.
அமைதி வழியை அறிவுறுத்திய வள்ளலாரின் பிறப்பே ஒரு பூகம்பப் பிறப்பு என்று கூறும் கவிஞர், அது அளவில், 5.1 ரிக்டர் என்றும் கூறுகிறார் (வள்ளலார் வாழ்ந்தது 51 ஆண்டுகள்). வள்ளலாரின் பாடல்களை மட்டுமே அறிந்த பலருக்கும், அவருடைய உரைநடை எவ்வளவு சிறப்பானது என்பதை இத்தொகுப்பிலுள்ள வள்ளலார் குறித்த கட்டுரை விளக்குகிறது.
தமிழ்மொழி ஆளுமைகள் குறித்த தொகுப்புதானெனினும், பிறமொழி அறிஞர்களோடும் படைப்புகளோடும், தமிழ்மொழி அறிஞர்களும் படைப்புகளும் பல இடங்களில் ஒப்பிடப்படுகின்றனர்.
உதாரணமாக, கவுடில்யரோடு திருவள்ளுவர், -ஹோமரின் இலியட்டோடு செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி-, காளிதாசனோடும் ஷேக்ஸ்பியரோடும் கம்பர் இப்படிப் பற்பல ஒப்பீடுகள். இவை பிறமொழி இலக்கியங்களின் அறிமுகமாகவும் அமைகின்றன.
மேலும் புதுப் புதுச் செய்திகள் பலவும் கட்டுரைகளுக்கிடையே ஊடும் பாவுமாக விரவியிருக்கின்றன. நுாலாசிரியர் கவிஞர் என்பதாலோ என்னவோ பலவிடங்களில் உரைநடைக்குள்ளிலிருந்து கவிதை எட்டிப் பார்ப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் மேற்கோள்களாகக் கவிஞர் காட்டும் கவிதைகளும், கருத்துகளும், நிகழ்வுகளும் நம்மை வியக்க வைக்கின்றன.
கண்ணதாசன் குறித்த கட்டுரையில், ‘அவர் வாழ்வை திராவிடத்தில் தொடங்கி, தேசியத்தில் அடங்கி தெய்வீகத்தில் முடிந்த கதை’ என்று குறிப்பிட்டிருப்பது சரியான மதிப்பீடு.
தமிழறியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில், 3,000 ஆண்டு தமிழ்ப் பெருமிதங்களை, 360 பக்கங்களில் வடித்தெடுத்திருக்கும் நுாலாசிரியரின் பணி சாதாரணமானதன்று.
ஜாதி, மதம், கட்சி, சொந்த மண் என்ற எந்த பின்புலத்தையும் பாராமல், தமிழ்ப்பணி என்கிற ஒற்றைப் புள்ளியில், 24 ஆளுமைகளின் பெருமைகளை இணைத்திருக்கும் நுால் இது. இவ்வகையில் இது முன்மாதிரியற்ற முதல் நுாலாகிறது.
தமிழாற்றுப்படை – தமிழுலகுக்குக் கிட்டியுள்ள அருங்கொடை; உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.
ராஜ்கண்ணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us