இறைவியின் அன்பை பெற்றவர்களின் கதைகளை கூறி, வாசகர்களையும் அன்பின் மழையில் நனையச் செய்வதே இந்நுாலின் அடிப்படை நோக்கம்.
ஒவ்வொரு அத்தியாயமும் தனி மனிதர்களை பற்றிய நிகழ்வாக இருந்தாலும், அனைத்தும் அன்பு என்ற ஒரே நேர்கோட்டில் இணைவது தனித்துவமாக உள்ளது. அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு தாவிச் செல்லும் வேகத்தை விடவும் ஒவ்வொரு கதையையும் நிதானமாக அனுபவிக்கும் போது பல ஆன்மிக உண்மைகளை உணர முடியும்.
இறைவன் ஏன் நான் கேட்டதை தரவில்லை... தீயவர்கள் ஏன் தண்டனையை அனுபவிக்கவில்லை... போன்ற கேள்விகளுக்கெல்லாம் இறைவியே பதில் கூறும் போது பக்தியின் மீதான அணுகுமுறையும், ஆன்மிகத்தின் மீதான புரிதலும் மேம்படுகிறது.
எவ்வித தன்முனைப்பும் இன்றி உடல்நலம் இல்லாத மகளை கவனித்துக் கொள்வதே தவமாகவும், வழிபாடாகவும் செய்து வரும் பெண்ணின் கதை மனதை உருக வைக்கிறது. மற்றவர்களின் நலனை விரும்பும் மனிதர்களுக்கு இறைவி அருளை வாரி வழங்கும் நிகழ்வு அதிசயமாக தோன்றினாலும் அது அன்றாட நிகழ்வு என்பதை விளக்குகிறது.
சில நேரங்களில் பிரச்னைகளாக தோன்றுவது, நம் வாழ்வின் திருப்பு முனையாகவும் இருக்கலாம் என்பதை துறவியின் வாழ்வை முன்னிறுத்தி நம்பிக்கையை விதைக்கிறது. அன்பு செய்ய விரும்பும் மனமிருந்தால் அறம் செய்யும் வழியை இறைவியே ஏற்படுத்தித் தருவாள் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. பார்வையில்லாத பக்தை சிற்பங்களை செதுக்கும் நிகழ்வில் இறைவியின் கருணை வெளிப்பட்டு சிலிர்க்கச் செய்கிறது.
உடல்நலம் இல்லாத பெண்ணிற்கு, ஒரு மருத்துவர் ‘பச்சைப்புடவைக்காரி புத்தகத்தை’ பரிந்துரைத்து, படிக்கச் செய்து அப்பெண் குணமடைந்த நிகழ்வே இப்புத்தகத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் சான்றாக அமைந்துள்ளது. இந்த நுால் அனைவரும் சுவைக்க வேண்டிய அமிர்தம் என்பதில் ஐயமில்லை.
– தி.க.நேத்ரா