திருமகள் நிலையம், புதிய எண்: 16, பழைய எண்: 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 464, விலை: ரூ.200.)
விக்கிரமாதித்தன் கதைகளை அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையிலும் விரும்பிப் படிப்பவர்கள் இருக்கின்றனர். அந்தக் கதைகளில் சின்னச் சின்ன மாறுதல்களை செய்து தற்காலப் புதிய தொழில்நுட்பச் சிந்தனைகளையும் சேர்த்து `விக்ரமா! விக்ரமா!' என்ற நாவலாகப் படைத்திருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன்.
விக்கிரமாதித்தன் கதையில் வரும் விக்கிரமாதித்தனை விக்ரமன் என்ற பாத்திரமாகவும், ஞானப் பிரகாசவல்லியைத் தீபாவாகவும், ஞானசீலனை நந்தன் பைராகியாகவும், வேதாளத்தை வேதாள் சிங்காகவும், பட்டியைப் பட்டாபியாகவும், கருப்பனை காளியப்ப சுவாமியாகவும் இந்த நாவலில் உலவ விட்டுள்ளார்.
இரண்டு பாகங்களைக் கொண்ட நாவலின் இரண்டாவது பாகம் இது. கதைத் தொடர்ச்சி விடுபடக்கூடாது என்பதற்காக முதல் பாகத்தின் கதைச் சுருக்கத்தையும் முதலில் கொடுத்துள்ளார். இரண்டாவது பாகத்தை முதலில் எடுத்துப் படிப்பவர்கள் கூட தொடர்ந்து படிக்க இந்தக் கதைச்சுருக்கம் உதவுகிறது.
விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன கதைகள், நாவலில் இடம்பெறும் இடங்களில் எல்லாம் அச்சு எழுத்தில் வித்தியாசமும் நடையில் வித்தியாசமும் காட்டப்பட்டிருப்பதால் நாவலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
பத்து அத்தியாயங்களில் 464 பக்க நாவல் எழுதப்பட்டுள்ளது. பெரிய அத்தியாயங்கள் என்றாலும் அத்தியாயங்களின் இடையே தடித்த எழுத்துக்களுடன் கதைப் போக்கு மாறும் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளதால் அதுவும் பெரிய தடையாக இல்லை.
நாவலில் சொல்லப்படும் கதை பழையது என்றாலும் அதை இக்காலத்திற்கு ஏற்ப எழுதியுள்ளதால் எல்லாராலும் எளிதில் படிக்க முடிகிறது. அந்தக் காலத்தில் அரண்மனைச் சூழல் இருந்தது போல் இக்காலத்தில் அலுவலகச் சூழலைப் படைத்ததுடன் தற்கால மொழி நடையையும் படைத்து இந்திரா சவுந்தர்ராஜன் நாவலில் வெற்றி கண்டுள்ளார்.