(கூடற்காண்டம்) மூலமும் உரையும்: உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 512).
கூடலம்பதி நாயகன் அருள்மிகு சொக்கேசப் பெருமானது திருவிளையாடல்களை வடமொழியில் 360 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புராணத்தை தமிழில் பரஞ்சோதி முனிவர் தந்துள்ள நூல் தான் திருவிளையாடற் புராணம். பரஞ்சோதியார் இந்நூலை மதுரைக் காண்டம், கூடற்காண்டம், ஆலவாய்க் காண்டம் எனப் பிரித்து 65 படலங்களாக 3363 விருத்தப் பாக்களில் தமிழுக்கு தந்தவர்.சொல் நோக்கம், பொருள் நோக்கம், சாமுத்திரிகா லட்சணம், ரத்தின பரீஷை, பரதம், அச்வலட்சணம் முதலிய பண்பாட்டுக் கூறுகளுக்கு இந்நூல் இலக்கியமாகத் திகழ்கிறது என்பர் வடமொழி நூலாசிரியர்.பரஞ்சோதியாரது திருவிளையாடற் புராணத்திற்கு நாட்டாரய்யாவிற்கு முன்னர் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேம்பத்தூரார், பெரும்பற்றப்புலியூர் நம்பி போன்றோர் உரை எழுதியிருந்தாலும், இன்றைக்கு எல்லாராலும் ஏற்றிப் போற்றக்கூடிய எளிய தெளிவான உரை நா.மு.வேங்கடசாமி நாட்டாரின் உரை தான். அத்தகைய சிறப்பான உரை வளத்தோடு திருவிளையாடற் புராணத்தை முல்லை நிலையத்தார் வெளியிட்டிருப்பது இலக்கிய சைவப் பெருமக்களுக்கு இந்நூல் பேருவுவகையைத் தரும் என்பதில் ஐயமில்லை.கூடற்காண்டத்தில் உள்ள "நான்மாடக் கூடலான படலம்' எனத் துவங்கி "நாரைக்கு முக்தி கொடுத்த படலம்' என்று நிறைவுற்ற 30 படலங்களின் 1014 விருத்தப் பாக்கள் அடங்கியது இந்நூல். 19ம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் தலைசிறந்தவர் நா.மு.வேங்கடசாமி நாட்டார். இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, இன்னாநாற்பது போன்ற நூல்களுக்கு உரை வகுத்துத் தந்த பெருமகனார். சீர் பிரித்து உரையோடு, விளக்கவுரையுடன், அவ்வுரைக்குத் தொடர்புடைய பிற இலக்கிய மேற்கோள்களையும், ஒவ்வொரு விருத்தப் பாக்களின் விளக்க உரையோடு இலக்கணக் குறிப்பையும் கோடிட்டுக் காட்டி ஓர் ஆய்வுரை போல் தந்துள்ளார் நாட்டாரய்யா.இந்நூல் அனைத்து சைவப் பெருமக்களுக்கு மட்டுமல்லாது இலக்கிய, தமிழார்வலர்கள், ஆய்வு மாணவர்கள் போன்றோருக்கும் பெரிதும் துணை நிற்கும்.இலக்கிய சமய ஆன்மிக ஆர்வலர்கள் அவசியம் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் இந்நூல்.