நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்:148)
இருபது கதைகளடங்கிய, ஜாதிமல்லி, ரோஜா, முல்லை, மருக்கொழுந்து ஆகியவை கொண்ட இந்தக் கதம்பக் கொத்தின் முதல் கதையே, "இரண்டு கடிதங்கள் வித்தியாசமாகப் புனையப்பட்டு மகிழ்ச்சி தருகிறது. கல்வி நிலையங்களில் பகல் கொள்ளை, மயானத்தில் உலவிடும் பணப்பேய்கள், அம்மாக்கிழவியை அம்போ என்றுவிட்ட தறுதலைப் பையன், தேர்தல் பின்னணியில் பசுவுக்கு சுகப்பிரசவம் போன்ற கதை அமைப்புகளில், நூலாசிரியரது சமூக நலன், ஆர்வமெல்லாம் பளிச்சிடுகிறது.
சிறு கருவினைப் பொடி வைத்து, ஊதிப் பெரிதாக்கும் கதை சொல்லும் உத்திகளில் தான் எத்தனை, எத்தனை புதுமை புரட்சிகரமான சிந்தனைகள்? பொழுதைப் போக்குவதற்காக, ஈஸி சேரில் ஆர அமர்ந்து இவரது கதைகளைப் படிக்க இயலாது. படிப்பவர்களை நாற்காலியின் விளிம்பிற்குக் கொண்டு விடும் சமர்த்தர். தமிழுலக வரவேற்பு நிச்சயம்.