கொங்கு ஆய்வு மையம், 58/2, திரு.வி.க., நகர் சாலை, பாலக்காட்டுத் தோட்டம், ஈரோடு638 011. (பக்கம்: 97. விலை: ).
முனைவர் செ.இராசுவின் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை முன்னாள் தலைவர், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், திருமணச் சீர்கள், ஏழு திங்கள் சீர், கம்பரும் கொங்கு நாடும், கம்பர் தந்த தமிழ், கம்பர் வாழி, மங்கல வாழ்த்து, ஏரெழுபது, திருக்கை வழக்கம், கொங்கு நாடும் புலவர்களும், கொங்குக் குலக் குருக்கள் என்ற தலைப்புகளில் ஓர் ஆழமான ஆய்வு நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர்.
பழமையான பண்பாட்டுச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும், இலக்கியப் புகழும் ஒருங்கே கொண்டவர்கள் கொங்கு வேளாளர்கள். அவர்களது புகழ் பூத்த வாழ்வியல் பண்பாடு, சமுதாய ஒழுக்கம், திருமணம், எழுதிங்கள், சடங்குகள், கொங்கு வட்டாரத் தமிழ் போன்றவைகள் தனித்தன்மை வாய்ந்தவை. இத்தகைய பெருங்குடி பெருமக்களது வாழ்வியல் பண்பாட்டுக் கள ஆய்வு நூல் இந்நூல்.
"வரலாற்று காலத்திற்கு முற்பட்ட கால நாகரிகத்தை விளக்கும் தொல் பொருட்கள் கொங்கு நாட்டில் தான் மிகுதியாக உள்ளன (பக்.35).
"தில்லைப் பொன்னம்பலத்திற்கு முதலில் பொன் வேய்ந்த ஆதித்தன் கொங்கு நாட்டுப் பொன்னைக் கொண்டு தான் பொன் வேய்ந்தான் (பக்.33).
வேளாளர்கள் தொல்குடி, தொன்முதிர்கொடி என்று குறிக்கப்பட்டுள்ளனர்.
முதல் மொழிபெயர்ப்புக் காவியம் பெருங்கதை இயற்றிய கொங்கு வேளிர், சீவக சிந்தாமணியைப் பாடிய திருத்தக்கதேவர், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் போன்றோர் கொங்கு நாட்டைச் சேர்ந்த பெருமக்கள். இதுபோன்ற பல செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். "கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற தொடரை நிரூபிக்கும் ஆவணம் இந்நூல்.