பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், வெளிவந்திருக்கும் இந்த நூல், தனி கவனம் பெறுகிறது. இந்த நூலில், மாணவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகங்கள், கேள்விகள் என்னென்ன என்பதையும், அதற்கான தெளிவான பதில்களையும், ஆசிரியர் கூறியுள்ளார். பதில்கள், ஓர் ஆசிரியர் கூறுவது போல் அல்லாமல், ஓர் அண்ணன் தன் தம்பி, தங்கைகளுக்கு சொல்வது போல அளிக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் பரீட்சை எழுதுவது எப்படி, எப்படி படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம், ஞாபக மறதியை வெல்வது எப்படி என, மொத்தம், 150 கேள்விகளுக்கான பதில்கள், இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இதில் மேலும் சிறப்பு, பொருளடக்கத்திலேயே, 150 கேள்விகளையும் கொடுத்திருப்பது தான். மாணவர்கள், தங்களுக்கு வேண்டிய கேள்விக்கான பதிலை மட்டும் வாசிப்பதற்கு ஏற்றவகையில், அந்த பொருளடக்கம் அமைந்துள்ளது, வரவேற்கத்தக்கது.
படித்ததை குறிப்புகளாக எழுதிக்கொள்ளுங்கள்; காலையில் படிப்பது, மாலையில் படிப்பது என்பது முக்கியமல்ல. எப்போது படித்தாலும் ஆர்வத்துடன் படி என, மாணவர்களுக்கு, நூல் ஆசிரியர் எளிமையாக விளக்குகிறார்.
சி.கலா தம்பி