ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, தீண்டாமையை எதிர்த்துக் குரல் கொடுத்து, பெரும் மதப்புரட்சி செய்த ராமானுஜரால், இந்த ஜோதிட நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்பான விஷயம். மொத்தம், 383 சமஸ்கிருத சுலோகங்களில், 14 நீண்ட அத்தியாயங்களில் லக்ன பலாபலன்கள், 12 பாவகங்களில் நவக்கிரகங்களின் பலம், பலவீனம், கிரக சேர்க்கைகளின் பலன்கள், காரக கிரகங்களின் வலிமை, தசாபுத்திப் பலன்கள், ராஜயோகங்கள், வாகன பாக்கிய யோகங்கள், மரணம் தரும் திசா புத்திகள் என்று, ஏராளமான ஜோதிட நுணுக்கங்களை விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
வடமொழி சுலோகங்களுக்கு, மிகுந்த ஈடுபாட்டுடன் விரிவான விருத்தியுரை எழுதியுள்ளார். ஆங்காங்கு, பிரபலமானோர் பலரது ஜாதகங்களை உதாரணம் காட்டி விளக்கியிருப்பது அருமை. துலா லக்னத்திற்கு 3, 6க்குடைய குரு பாபி, நற்பயன்கள் நல்கமாட்டார் என்றே பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால், ராமானுஜரோ, குரு, துலா லக்னக்காரர்களுக்கு யோகம் தரக்கூடியவரே என்கிறார். அதேநேரம், தான் அவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் என, அவர் தன் நூலில் விளக்கவில்லை.
– மயிலை சிவா