செய்யுளைப் பற்றியெல்லாம் தெரிந்த தலைமுறை இல்லை இப்போது. வசனகவிதை என்று கேள்விப்பட்டிருந்தால் அபூர்வம். நவீன கவிதைகளின் ஆயுளை ‘சமீப கவிதைகள்’ முடித்துவிட்ட காலமோ இது...? சமூக இணையதளங்களின் கைங்கரியத்தில் தானே எழுதி, தானே வாசித்து, தானே பயனடையும் சமீப கவிதைகள் தெருவெங்கும் இறைந்திருக்கும் அகாலம். இதற்கு மத்தியில் தானும் கிடக்கிறது,
ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதைகளின் மொத்தத் தொகுப்பான, ‘தாய்வீடு’.
வெவ்வேறு கால கட்டங்களில் தொகுப்புகளாக வெளியான, ‘உயிர்மீட்சி, முகவீதி’ ஆகிய நூல்களில் உள்ள கவிதைகளையும் உள்ளடக்கி வந்த தொகுப்பு என்பதால் ஒரு விமர்சன வசதியும் இருக்கிறது. அப்போதே, வாசகர்கள் தம்மில் பேசிக்கொண்ட சில கவிதைகளைப் பார்க்கலாம். அவற்றிலேயே தெரியும், கவிஞரின் சில மனங்கள். கர்ப்பிணியாய் அலையும் மனநிலை பிறழ்ந்த பெண்ணை நாம் பார்த்திருக்கக் கூடும். செலவில்லை என்பதால், பரிதாபமும் பட்டிருப்போம். அதே பெண்ணை ராஜ சுந்தரராஜன் பார்க்கிறார் இப்படி…
கிறுக்குப் பிடித்த பெண்ணை / கர்ப்பவதியாக்க / எவன் மனம் துணிந்தது/ இப்படி / அதற்கு முன் இவளை / புஷ்பவதியாக்க / இறை மனம் துணிந்ததே/ எப்படி?
நாம் பைத்தியக் கர்ப்பிணியை என்றோ பார்த்தபோது அதிராமல் இருந்ததற்கு இன்றைக்கு வருத்தப்பட வைக்கும் வரி. அதிரடியான சோகத்துக்குத் தான் வருந்த வேண்டும் என எண்ணாது கவி மனம்.
கண் பரிசோதனை செய்து கொள்ளப் போகிறான். சிறிதும் பெரிதுமான அட்சரங்களைக் காட்டிச் சோதிக்கிறார்கள். அந்தப் பரீட்சையை வெற்றி கண்டு கண்ணாடியை மாட்டிக்கொண்டு வந்து நிறையப் படிக்க, எழுத வேண்டியதுதானே… அது எல்லோரும் செய்வது. ராஜசுந்தரராஜனுக்கு அங்கே எழுத்துகளைப் பார்ப்பது உபாதையாகத் தெரிகிறது.
கவிதையைத் தூண்டும் உபாதை.
ஓவியம் எழுதவோ தூரிகை / ஒட்டடை அடித்தால் என்ன? / வீணையின் நரம்பை / துணி உலர்த்தும் வேலைக்கு எடுத்தால் / என்ன / எழுத்துகள் / சொல்லாகி பொருள் குறித்தல் விடுத்து / பார்வையை நிறுத்துக்காட்டும் / படிக்கற்கள் ஆகிறதை / கண்டேன் / கண் மருத்துவ மனையில். என்று எழுத நாடி நரம்பெல்லாம் மொழிக்காதல் கொண்ட மனம் தேவைப்படுகிறது.
காதல் மட்டுமா படுத்தும்? காமமும்தான். அதைச் சொல்வதிலும் ஒரு அவலம்.
குளிர் கண்டிருந்தது காற்றில் / என்னவோ செய்தது என் உடம்புக்கு /கட்டுக்கயிற்றில் நிம்மதியற்றுப் / பரபரத்தது வீட்டு நாய்; /
கட்டற்றுப் புணர்ந்தன தெருநாய்கள். / விடலை என் / எதிரே தோன்றி / ஒரு விற்பனைக்காரி / வேண்டுமோ என்கிறாள், / முழம் மல்லிகை.
வெறும் மல்லிகையை வைத்துக்கொண்டு எதை முழம் போடுவது என்று யோசித்துப் பார்த்தால் நமக்கே ஒரு புன்னகை பூத்துவிடுகிறது. கைத்த புன்னகை. தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் இந்தக் கைப்பு பரவிக்கிடக்கிறது. அதை உணர்ந்தேதான் கவிஞர் வாக்குமூலம் தருகிறார்:
‘அளவுக்கு மீறிக் கவலை கொண்டு அனத்தினால் அது கவிதை.’இந்த வாழ்க்கையில் ஓர் உலகாயதக் கவலை, ஒரு வீடு வேண்டும் என்பது. அதுவும் இவரது மனதுக்கு வேறு ஒரு காரணத்தோடு கூடிய கவலை ஆகிறது.
வீடொன்று வேண்டும் / வெயிலையோ மழையையோ / பகைப்பதற்கு அல்ல /காக்கையும் கூடுகட்டும்/ அடைகாக்க அடுத்த தலைமுறைக்கு தலைசாய்க்க வசதி செய்துதந்துவிட முடியாதா என்கிற ஆதங்கத்துக்குப் பக்கத்திலேயே, வாழும் வகை இப்படி ஆயிற்றே என்கிற கேலியும் கிடக்கிறது.
நாக்கு தொங்க வாய்நீர் வடிய / நாறுகிற திசையெல்லாம் ஓடுது / நாய்.
கரணம் போட்டுக் கட்டிய வீட்டில் / இருந்து தின்னுது சிலந்தி.
சின்ன காரியங்களைப் பற்றி மட்டும் கேலி செய்துவிட்டுத் தப்பித்துப்போகும் ஏழை மனம் அல்ல கவிஞருடையது. வானத்தை முட்டும் அளவு பிரம்மாண்டமான விமர்சனங்களையும் வைக்கிறது அவரது துணிவு.
வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி / இல்லை என்று கைவிரித்து நிற்கிறது / சிலுவை இந்தக் கேள்விக்கு எந்த மதம் அல்லது கோட்பாடு பதில் சொல்லிவிடும்? பதில் இல்லாத கேள்விகள் எல்லா இடங்களிலும் உண்டு.
மண் மீது / ஒரு பறவைப் பிணம் / மல்லாந்து நோக்குது / வானை.
அது அங்கே எதை அவாவுகிறது?
கண்டெடுத்தோம் / அப்படியும் கவலைப்படுகிறோம் / ஐயோ யார் தொலைத்தாரோ என்று இதற்குக் காரணம் என்ன?
அப்படி ஒரு நிலைமை / வரும் என்றால் அக்கணமே / வாழோம் என்றிருந்தோம் / வந்தது. / அப்படியும் வாழ்கிறோம்.
இது என்ன கணக்கு? இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.
‘சமீப கவிஞர்கள்’ ஆயிரக்கணக்கானோர், கவிதைகளை, தங்கள் கைவசமுள்ள அடையாளத்தின்படி தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ராஜசுந்தரராஜன் கவிதையாக இருப்பதை கண்டு அடைந்திருக்கிறார்.
இரா முழுக்க / தவம் கிடந்தன / வான் நிறைய மீன்கள். / பரிதியை நேர் நின்று கண்டதோ / விடிய வந்த ஒரு வெள்ளி என்பது கவி வாக்கு.
தொடர்புக்கு: ramevaidya@gmail.com
– ரமேஷ் வைத்யா