இன்றைக்கு, 43 வருடங்களுக்கு முன்னால், ‘அன்று வேறு கிழமை’ என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியானது. எழுதியவர் ஞானக்கூத்தன். அந்தப் புத்தகம் ஏறக்குறைய பொன்விழா கொண்டாடவிருக்கும் காலத்தில், இப்போது ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். தலைப்பு: ‘என் உளம் நிற்றி நீ’.
தலைப்பே வாசகருக்கு ஒரு செய்தியைச் சொல்லி நிற்கிறது. ‘இது ‘நெஞ்சுக்குள் நீ’ பாணி கவிதைகள் அல்ல; மொழியில் நமக்குக் கூடுதல் பரிச்சயம் தேவை. ‘வார்த்தைகளின் பொருள் ஒன்று, அவை கூடி உணர்த்தும் பொருள் வேறு’ என்பதே அந்தச் செய்தி. பூஜைக்குப் பூப்பறிக்கப் போன தாயுமானவர் கண்களுக்கு, மலர்களுக்கு நடுவே கடவுள் தெரிகிறார். ‘வேறு இடத்தில் உன்னைக் கும்பிட அலைகிறேனே, எல்லா இடத்திலும் இருக்கும் நீ என் மனசுக்குள்ளும் இல்லையா…’ என்று வெட்கப்பட்டுப் போகும் தாயுமானவர், கடவுளிடம் சொல்வது: ‘என் உளம் நிற்றி நீ’.
வல்லிய மரபிலக்கியப் பயிற்சி உடையவர் ஞானக்கூத்தன். இத்தனை நீளமான இலக்கிய வாழ்வில் கவிதைக் கோட்பாடுகளைப் பற்றி அதிகம் பேசியவர். கவிஞனாகவே தன்னை முன்வைப்பவர். இவர் கவிஞராக அறியப்பட்ட பிறகு வந்தவர்களில், ‘எல்லோரும் எழுதுகிறார்களே, நாமும் எழுதலாம்’ வகைக் கவிஞர்களை வடிகட்டிவிட்டாலும் தொடர்ந்து காத்திரமான கவிஞர்கள் எழுந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அடுத்த தலைமுறைக் கவிஞர்களின் பொதுவில், தன் படைப்பை வைத்திருக்கிறார் ஞானக்கூத்தன்.
சின்னதாக ஒரு சித்திரத்தை வரைந்துவிட்டு, அதன் பின் உள்ள அர்த்தத்தை வாசகர் கற்பனைக்குள் வளரவிடுவது மாதிரியான கவிதைகள் சுவாரசியம்.
குட்டித் தவளைகள்
விளையாடும் சாலையில்
காசிக்குப் போகும் பயணியே
பார்த்து நட
காசிக்குப் போவது புண்ணியம் தேடி. அதுவும் உடனடி விளைவுக்கோ என்னவோ, பாதயாத்திரையாகப் போகும் பக்தன். கடவுளை எண்ணி, தவளைகளை மிதித்துச் சிதைப்பது தகுமா? அதுவும் குட்டித் தவளைகள். அதுவும் விளையாடி மகிழும் தவளைகள். கவனம் வேண்டாமா? கவிதையின் தலைப்பையும் கவனிக்க வேண்டும். ‘இரண்டு பாதைகள்.’
ஞானக்கூத்தன் கவிதை எழுதத் தேர்ந்தெடுக்கும் கருக்கள் புதிதுபுதிதாய்த் தென்படுகின்றன. எதிர்பாராத் தன்மை. ஒருவன் தெருவில் நடந்துபோகும் போது, ஒரு வீட்டு ஜன்னலைப் பார்ப்பதுண்டு. அதன் கதவு எந்நேரத்திலும் விழுந்துவிடலாம் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தே விடுகிறது! அந்த ஜன்னல் கதவு விழுந்தே விடுகிறது.
அதுவும் அவன் தலைமேலேயே! அப்போது ஓர் அசரீரி வாக்கு ஒலிக்கிறது, ‘விழும் விழும் என்று நீதான் எதிர்பார்த்தாய். பலித்துவிட்டது போ’. இப்படி ஒரு சம்பவம் கவிதையாகிறது. இதை, ஜன்னல் கதவு அவன் தலையில் விழுந்து அடிபட்டு அவன், ‘மருத்துவமனையில் படுத்திருந்தான்’ என்கிற இடத்தில் தொடங்கிச் சொல்கிறார்.
இன்னொரு கவிதையில், பாரதி யார் இருக்கிறார். முதலை வடிவ மேகத்தைப் பார்த்தவர், அதைப் பற்றிக் கவிதை எழுத பேனா தேடுகிறார். கிடைக்கவில்லை. மனைவியிடம் கேட்டாலும் தரித்திரமே பதிலாகக் கிடைக்கிறது.
அப்போது (இந்தக் கவிதையை எழுதிய) ஞானக்கூத்தன் பாரதியாரிடம் ஒரு துண்டு புகையிலை கேட்கப் போகிறார். ஏமாற்றத்தைப் பற்றி பாரதியார் எழுதினாரோ என்னவோ, தான் எழுதிவிட்டதாகக் கவிதையை முடிக்கிறார் ஞானக்கூத்தன். ஒரு கவிதையில், வந்த மழையை ரசிக்கிறார்.
மழையின் தாரைகளோடு பூமிக்கு / மீண்டும் பிறப்பவர்கள் வருகிறார்கள் என்று / முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் சொன்னார்
இன்னொன்றில் வராத மழையை இறைஞ்சுகிறார்:
வயல்களிடமும் பயிர்களிடமும் / செடி கொடி மற்றும் மரங்களிடமும் / வரப்போகிறாய் நீ என்று / உறுதி கூறி மழையே அவமானப்படுகிறேன்.
கவிஞர் தொடங்கும் கவிதையை நாம் முடிப்பதும் ஒரு சுவாரசியம்தானே…
சொன்னதைத் தாமதமாய்த்
திருப்பிச் சொல்கிறது
உனது குன்றம்’ என்ற பாடலை
வீணையில் இசைத்தாள்
ஞானாட்சரி
அப்புறம் நான்
நெடுநேரம்
சிரித்துக் கொண்டிருந்தேன்
என்று இவர் எழுதும்போது ‘அது என்ன பாடல்?’ என்று நாம் யோசித்தும் யூகித்தும் இருப்போம்.
பல கவிதைகளில் தத்துவ யோசனை, சவுக்காகச் சுழல்வதையும் அனுபவிக்கலாம்.
அறியாமையின் கதவுகள்
இரண்டே இரண்டுதான்
ஒன்றின் பெயர் அறியாமை
மற்றதன் பெயர்
அதை அறியாமை
ஊடே ஊடே குட்டிக் குட்டிக் கதைகளும் கவிதையாகத் தோற்றம் தந்து நிற்கின்றன. ஒரு கவிதையில், பேசும் கிளி ஒன்றை வாங்கிவருகிறார் கவிஞர். அந்தக் கிளி பேசுவதே இல்லை. கிளியை விற்கத் தீர்மானித்தவர், வாங்க வந்தவரிடம் ‘கிளி பேசும்’ என்று சொல்லி விற்றுவிடுகிறார். பொய் சொன்ன குற்றவுணர்ச்சியோடு இவர் நிற்கையில் அந்தக் கிளி ‘குட்பை’ என்று சொல்லிவிட்டுப் போகிறது!
இப்படி பல ‘சாம்பிள்’களைச் சொல்லலாம். வெவ்வேறு வகைமைகளிலான கவிதைகளைக் குறிப்பிடலாம். தொகுப்பின் விசேஷமாக ஒரு விஷயம் இருக்கிறது… அதாவது, ஒரு கவிதைத் தொகுப்பைப் படித்தால் மகிழலாம்; ஏங்கலாம்; வருந்தலாம்.
ஞானக்கூத்தன் போன்ற, ‘மாஸ்டர்’ கள் எழுதிய கவிதைகளைப் படிக்கும்போது பயப்படவே வாய்ப்பு இருக்கிறது. அவர் எழுதிய அர்த்தம், நாம் புரிந்துகொள்ளும் அர்த்தம், இவற்றைத் தவிர வேறு அர்த்தங்களும் இருக்குமோ என்கிற பயம்.
ஞானக்கூத்தனும் அதை
மறுதலிக்காதது போல் சொல்கிறார்:
வாழ்க்கையில் முதல் தடவையாக
கவிதையைக் கண்டு பயப்படத்
தொடங்கினேன்.
கவிதைகள் காகிதங்களாக
அடுக்கப்பட்டிருக்கும்
மேஜைப் பக்கம்
திரும்பிப் பார்க்கவே எனக்குப்
பயமாகிறது.
தொடர்புக்கு: ramevaidya@gmail.com
– ரமேஷ் வைத்யா