நூலாசிரியர், மானுடம் பாடும் இன்றைய மகாகவி! அறிவியல் அறிவும், தொழில்நுட்ப ஆற்றலும் கொண்டு, இந்திய தேசத்தின் உயரிய பத்மபூஷண் விருது பெற்ற பேராசிரியர் வா.சே.குழந்தைசாமியை வெகுதூரம் தள்ளி நிறுத்தி விட்டு, முழுக்க முழுக்க கவிஞர் குலோத்துங்கனின் கவி ஆளுமையை நிறுத்து எடையிடும் துலாக்கோல் தான் இந்நூல்.
ஒரு உயர்ந்த பொறிஞராக, கல்வியாளராக வா.சே.கு., வின் மகத்தான பங்களிப்புக்கு அப்பாற்பட்டு, தன் வாழ்க்கைப் பின்புலம், அறிவுப் பின்புலம், இலக்கியப் பின்புலம் ஆகியவற்றை தன் மனப்பின்னணியில் கொண்டு, அவர் இயற்றிய உயரிய கவிதைகளைப் பல்வேறு அணுகுமுறைகளில் மேலைப் படைப்புகளோடு ஒப்பீடும், பகுப்பாய்வும், கருத்தாய்வும் செய்துள்ளார் நூலாசிரியர், திறனாய்வாளர் ப.மருதநாயகம்.
குலோத்துங்கன் எனும் கவிஞருக்கு மூலவராக விளங்கும் வ.சே.கு.,வின் ஒரு தனி கூட்டாண்மை நிறுவனமாக உலா வருபவர். பல்வேறு பதவிக் கடமைகளையும் தன்னிடம் கொண்டு உயர் அழுத்தச் சூழல்களில் பணியாற்றினாலும், அவரது ஆளுமையின் கீழ் வரும் கவிதைத் துறைக்கு வாழ்நாள்
இயக்குனராக நியமிக்கப்பட்டவரே கவிஞர் குலோத்துங்கன்.
டி.எஸ்.எலியட், வேர்ட்ஸ் ஒர்த், ஜான் மில்டன், ராபர்ட் பிராஸ்ட், லார்ட் டென்னிசன், ஆண்ட்ரூ மார்வெல், ஆடென், ஜான் டன், சாக்ரடீஸ், ஷெல்லி, இர்விங் லேட்டன் போன்ற மேலைநாட்டுப் படைப்பாளர்களின் கவிதைகளோடும், கருத்துக்களோடும் ஒப்பிட்டும், பொருத்தியது அகன்ற திறனாய்வின்
அடையாளம்.
செய்யுள் மரபுக்கு உட்பட்ட, பா வகைகளில், புதிய பாடுபொருள்களைப் புகுத்தி, இக்காலத்திய சூழலுக்கேற்ற எளிய சொல்லமைவுகள் செய்து கவி படைக்கும் குலோத்துங்கனின் பாக்களில் பாடுபொருள்கள், யாப்பமைதி, சந்தம், கருத்துச் செறிவு ஆகியவை எவ்வாறு ஒன்றுக்கொன்று உயிரியல் தொடர்புடையன என்பதையும் விளங்க வைக்கிறார்.
மார்க்சீயத்தை நேரடியாகச் சொல்லாவிட்டாலும், வர்க்க பேதங்கள், ஏழ்மைத் துயரங்கள், மூட எண்ணங்கள், பகுத்தறிவு என பலவற்றையும் உள்ளடக்கிய
கவிதைகள், அவரை ஒரு மனித நேயக் கவிஞராகப் பிரதிபலிப்பதை இதில் காணலாம். குலோத்துங்கன் எனும் கவிச்சித்தர், ‘மானுடம் பாடும் இன்றைய மகாகவி’ என்று தயங்காமல் ஏற்க வைக்கிறார் நூலாசிரியர். படிக்க வேண்டிய, பயனுள்ள திறனாய்வு நூல்.
பிரபாகரபாபு