வித்தியாசமான வர்ணனைகள் கொண்ட சிறந்த சிறுகதைகள். ‘மழை பெய்து ஓய்ந்திருந்த, அந்த மாலை வெயிலின் மினுமினுப்பில், நாகேஸ்வரன் கோவிலின் கோபுரம், பொன்னிறமாக தங்கத்தில் குளித்தது போல மின்னிக் கொண்டிருந்தது. அதன் பின்புறத்தில், அசை போட்ட எருமைகள் போல, கறுப்பும் செம்பழுப்புமான மேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன (பக். 5௭), வாழ்க்கையின் ரணங்களையும், வேதனைகளையும், வலிகளையும் சொல்லும் கதைகள்.
‘அப்ரஞ்ஜி’ என்ற கதை தான் இந்தத் தொகுதியில் உள்ள கதைகளில் சிறந்த கதை. அந்த ஏரியாவில் வளைகாப்பு, காதுகுத்து, கல்யாணம், கருமாதி இப்படி விசேஷ நாட்களில், முறையாக வீட்டு வேலைகள் செய்ய வேலைக்காரி அப்ரஞ்ஜி இல்லாமல் முடியாது.
பஞ்சு பஞ்சாகப் பறக்கும் வெள்ளை முடி, லேசாக கூன் விழுந்த முதுகு, இறுக்கிக் கட்டப்பட்ட சேலையில் அப்ரஞ்சியைப் பார்க்க, ௯௦ வயது என்று சொன்னால், யாராலும் நம்ப முடியாது. அந்த ஏரியாவில் உள்ள வீடுகளில், மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்தவள் அப்ரஞ்ஜி. ஆனால், அவள் ஒரு நாள் மூப்பு காரணமாக சாலையில் செத்து விழுந்தபோது, யாரும் சாவு எடுக்க முன்வரவில்லை.
கார்ப்பரேஷன் வண்டி தான் வந்து அள்ளிக் கொண்டு போகிறது. வாழ்க்கையின் இதுபோன்ற குரூரங்களைச் சொல்லும் கதைகள் இந்தத் தொகுதியில் ஏராளம்.
எஸ்.குரு