கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மூன்றிலும் அழகிய சிங்கரின் எழுதுகோல் தீட்டிய ஓவியங்கள் நூலாகியுள்ளன. ‘விருட்சம்’ என்ற தன் இதழிலும், பிற இதழ்களிலும் எழுதிய படைப்புகளைத் தொகுத்து, எழுத்துக் ‘காடாக’ மாற்றியுள்ளார்.
‘மர நிழலில் நின்றிருந்தேன். என்னைச் சுற்றிலும் மர நிழல், நான் நின்ற இடத்தைப் பார்த்தேன். வெயில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருக்கிறது...’ என்ற கவிதை பத்தாவதாக உள்ளது. 25 எண்களும் தலைப்புகளாக வாய்ப்பாடு போல் தரப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக சிந்தனைத் தலைப்புகளால் கவிதைக்கு மகுடம் சூட்டியிருக்கலாம்.
எட்டு சிறுகதைகள் நடுவிலே தரப்பட்டுள்ளன. தங்கச் சங்கிலி சிறுகதையில் காதலன் கணேஷ், காதலிக்கு வாங்கித் தந்த தங்கச் சங்கிலியை கழுத்திலிருந்து திருடன் பறித்துச் சென்றான். அதுவரை திருமணத்திற்கு சம்மதிக்காத காதலி, சங்கிலியை பறி கொடுத்த பின், நிச்சயம் செய்து திருமணம் பண்ணிக் கொள்ள முன் வந்தது சுவையான திருப்பம்.
பன்னிரெண்டு கட்டுரைகள் நிறைவாக தரப்பட்டுள்ளன. இதில் சுவையான செய்திகள் உள்ளன. ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம் என்ற கட்டுரையில் தன் வீடே மூன்று பேர் வாழும் முதியோர் என்று சுவாரசியமாக எழுதியுள்ளார்.
ஒரே மாவிலிருந்து கவிதை இட்லியையும், சிறுகதை முறுகல் தோசையையும், கட்டுரை ஊத்தப்பத்தையும் சுவையாகத் தான் பரிமாறியுள்ளார் அழகிய சிங்கர்.
– முனைவர் மா.கி.ரமணன்