நடுத்தரக் குடும்பத்தில் மேற்படிப்பு படிக்கும் கனவு உள்ளோர் ஏராளம். அவர்களில் கணிசமானவர்களுக்கு அது வெறும் கனவாகவே இருப்பதற்கு, ‘வீட்டில் போதிய நிதி வசதி இல்லை’ என்பதே காரணம்.
ஆனால், உயர் கல்விக்கும், வெளிநாட்டில் படிப்பதற்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அப்பால் அவர்களுக்கு உதவ, பல கூட்டுறவு மற்றும் கிராமீன் வங்கிகள், நிதி அமைப்புகள், கடன் தரக் காத்திருக்கின்றன என்பதை விவரிக்கிறது. ‘ஹவ் டு கெட் எஜுகேஷனல் லோன்ஸ் டு ஸ்டடி இன் இந்தியா அண்டு அப்ராட்’ என்ற ஆங்கில நூல்.
பரவலாக அறியப்படாத வங்கிகள், நிதி அமைப்புகளைப் பற்றியும், அவற்றின் கல்விக் கடன் திட்டங்கள் பற்றியும் விரிவான தகவல்களை இந்நூல் தொகுத்து தருகிறது.
மேற்படிப்புக்கு மட்டு மல்ல, ஆராய்ச்சிப் படிப்பு, பட்டப் படிப்பு, ஏன்... பள்ளிப் படிப்புக்கும் கூட பல வங்கிகளும் நிதி அமைப்புகளும் கல்விக் கடன் தரத் தயாராக இருக்கின்றன.
‘கல்விக்கு கடன் தரும் வங்கி மற்றும் நிதி அமைப்புகள், தங்கள் திட்டங்களைப் பற்றி அதிகம் விளம்பரம் செய்வதில்லை. இதனால் தேவையானவர்களுக்கு அது தெரியாமலேயே போய் விடுகிறது’ என, நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
மேலும், ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள், தங்கள் திறன்களை அதிகரிக்கவும், தகுதியை மேம்படுத்தவும், பகுதி நேரப் படிப்பில் சேர்வதற்கு, பல அமைப்புகள் கடன் தருகின்றன என்பது இந்த நூல் தரும் நல்ல தகவல்.
தகவல்களின் அளவைக் குறைக்காமல், நூலின் பக்க அளவை குறைத்திருக்க ஆசிரியர் வழி தேடி இருந்தால், இதைப் எளிதாக பயன்படுத்த வசதியாக இருக்கும் அடுத்த பதிப்பில் இவற்றை நூலாசிரியர் செம்மைப்படுத்துவார் என்று கருதலாம்.
– சி.சுரேஷ்