உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தை நிறுவி, அதை திறம்பட ஆட்சி செய்தவன் விக்கிரமாதித்தன். அவன் அரச வாழ்க்கையில், விந்தைகள், விசித்திரங்கள், மாயங்கள் நிறைந்திருந்தன.
அவன் சந்தித்த சோதனைகளை, தன் புத்தி சாதுர்யத்தால் எதிர்கொண்டான். அவை, பிறருக்கு படிப்பினையாக உள்ளன. அவனுடைய கொடைத்திறன் அனைவரையும் கவரும்.
புத்தி சாதுர்யத்தால், அனைத்து சிக்கல்களில் இருந்தும் விக்கிரமாதித்தன் வெளிவந்து விடுவான். அவனது சிம்மாசனத்தில் இருந்து பதுகைகள் போஜராஜன் என்ற மன்னனுக்கு சொல்லும் கதைகள், வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு சொல்லும் கதைகள், வேதாளம் சொல்லும் புதிர்களுக்கு, விக்ரமாதித்தன் அளிக்கும் விடைகள் இதில் உள்ளன. கற்பனைகளுடன் நீதிகளை வலியுறுத்துபவை.
இந்த புத்தகத்தில், 79 தலைப்புகளில் ஏராளமான கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும், துப்பறியும் நாவலைப் போல் சுவாரசியமாகவும், வரலாற்று நாவலைப் போல் படிக்க ஆவலை ஏற்படுத்துவது இதன் சிறப்பாகும்.
– ஆர்.எஸ்.,