உலோகம் உரைக்கும் கதைகள் என்ற இந்நுால், பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதல்வர் மொழிபெயர்த்த நுாலாகும். ‘TILES ABOUT METAL’ என்ற நுாலின் தமிழ் வடிவம். படிப்பதற்கு ஏற்றதாய் தெளிவான எளிய நடையில் இந்நுால் உருவாகியிருக்கிறது.
உலோகங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியுள்ள சிறப்பு பாராட்டக் கூடியது. என்றாலும் அதை புரிந்து கொள்வதற்கு சற்றே சிரமப்பட வேண்டியிருக்கிறது.
சான்றாக, இலிதியம், மகனிச்சயம், ஏலமினியம், கோபாலது, துங்கஸ்டன், பீலாதினம் என்பன. 16 உலோகங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாக இந்நுால் படிப்பதற்கு இலகுவாக இருப்பதற்கு, ஆசிரியர் சொல்லிச் செல்லும் முறை காரணமாக அமைகிறது.
உலோகங்களின் வரலாற்றுப் பார்வையை இவரால் சுவைபடச் கூற்றுகள், அதன் பயன்பாடு, அதன் தன்மை, அதன் எடை, உலோகத்தின் பின்னணியில் நிகழ்ந்த சுவையான வரலாற்றுப் பண்பாட்டு நிகழ்வுகள் முதலியவற்றை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ள ஆசிரியரைப் பாராட்ட வேண்டும்.
உலோகங்கள் பற்றிய அரிய செய்திகளைத் தாங்கிய நுால், இவ்வகையில் தமிழில் வெளிவந்ததில்லை என்று சொல்லலாம். மேரி க்யூரி அம்மையாரின் இடைவிடாத உரோனிய ஆராய்ச்சி சுவையானது. அணுசக்திக்கு அதன் பயன்பாடு எத்தகையதாக இருந்திருக்கிறது என்பது, விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது.
பொன் பற்றிய தகவலில், மன்னன் மைடாஸ் பற்றிய கதையைச் சுவையாகக் கூறியுள்ளார். 800 பெண்களின் ரத்தத்தை உறிந்தெடுத்து, அதிலிருந்து பொன்னைப் பிரித்து எடுத்துள்ளதான செய்தி வியப்பூட்டுகிறது (பக்கம் 34).
வெள்ளி என்ற கட்டுரையில், வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தை வெள்ளி மழைத்துளியாக மாற்றுகிறது.
அந்த ஈரப்பதம் வெள்ளியால் ஈர்க்கப்பட்டு குளிர்ந்து, தீர்த்துளியாக உருமாறி, மழை பொழியக் காரணமாகிறது என்ற தகவலும் ஆசிரியரால் அழகுற எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
வேதியியல் படித்த மாணவர் ஒருவர், தன் காதலிக்கு ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்த இரும்புகொண்டு மோதிரம் பரிசளிக்க விரும்பினார் என்று தெரிகிறது. ஈயம் நச்சுத்தன்மை வாய்ந்தது.
ஆனால், ஈயத்தின் இருப்பளவு கொண்டு தான், உலகின் பெரும்பாலான போர்களின் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, ராணுவத்தில் அதன் செயற்பாடு முக்கியமாக இருந்துள்ளது.
பாதரசம் உடைய கூட்டுப் பொருள் கலப்பின் அது கொடிய நஞ்சு ஆகும். மக்னீசியம் மக்கள் வாழ்க்கையால் மருத்துவ குணம் கொண்டது. இந்நுாலில் பல தகவல்கள் சிறப்புற விளக்கப்படுகின்றன.
பிலாதினத்தால் ஆன கம்பிகள் அறுவை மருத்துவத்திற்கு மிகவும் பயன்படுவதை விளக்கமுற எடுத்துரைக்கும் ஆசிரியர், அது அணிகலன் செய்வதற்குப் பயன்படுவதால் நவநாகரிகச் சின்னமாக ஆகிவிட்டது என்றுரைக்கிறார்.
கட்டுரையின் ஒவ்வொரு சிறுதலைப்புகள், கட்டுரைக்குச் சுவையூட்டுவனவாயும், கட்டுரை படிக்கும்போது சலிப்பு ஏற்படாவாறும் அமைந்திருப்பது, மொழிபெயர்ப்பு என்பதைத் தாண்டி சிறப்படைய வைத்துள்ளது. நல்லதோர் தகவல் களஞ்சியம்.
பேரா., ராம.குருநாதன்