காளிங்க நர்த்தன அட்டையுடன் திகழும் இந்த மலர் ஆதிசங்கரர் துவக்கிய நான்கு மடங்களில் தலையாய் சிருங்கேரி மட ஆதரவுடன், சனாதன மத தர்மத்தை பரப்பும் மாத இதழ் அம்மன் தரிசனத்தின் தீபாவளி வெளியீடாகும்.
எடுத்த எடுப்பில், ஒவ்வொரு மனிதனும் உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் அருள் வாக்குடன் துவங்குகிறது.
காளிதாசன் கருத்தாக வெளியான ஆய்வுக்கட்டுரையில், பரமேஸ்வரனான சிவபெருமானை பெருமையாக பேசியதில் ‘‘அவர் கர்வம் சிறிதும் இல்லாதவர்,’’ என்ற கருத்து அப்பெருமானின் சிறப்பை பறைசாற்றும்.
சிருங்கேரி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகளை, இஸ்லாமிய அன்பர் வணங்கி, அவருடன் சமஸ்கிருதத்தில் உரையாடிய தகவல் மதங்களைத் தாண்டிய சிறப்பு இம்மடத்திற்கு உள்ளதைக் காட்டும் தகவலாகும், கணவனைப் பிரிந்த காரிகையர் என்ற தலைப்பில் இலங்கை ஜெபராஜ் ‘இராமன் தம்பி லட்சுமணன், தன் மனைவி ஊர்மிளையை பிரிந்தான். அவளது மாண்பை விளக்கும் இக்கட்டுரை சிறப்பானது.
எத்தனை தீபாவளி என்ற கட்டுரையில் ‘அஞ்ஞான இருளைப்போக்கி மெய்ஞானம் தர வல்லது’ என்பதைப்படிக்கும் போது, ஆண்டு தோறும் தீபாவளி ஏன் என்பதற்கு விளக்கமும், அதை நம் இந்தியாவில் பல மாநிலங்கள் பின்பற்றும் சிறப்பும் அறிய வழிகாட்டும்.
‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோரை’ வெறுத்த இராமலிங்க சுவாமிகள் உணர்வைத் தாங்கிய கருத்தும் உள்ளது.
மொத்தத்தில் ஓர் ஆன்மிக மலர் என்று கருதலாம்.