பெருங்கலைஞராக போற்றப்படும், தி.ஜானகிராமன் எழுதிய கதைகள். இதழ்களில், பல காலக்கட்டங்களில் வெளியான, 28 கதைகளின் தொகுப்பு நுால். இதுவரை, தொடுக்கப்படாதவை.
வாழ்வில் சாதாரண நிகழ்வுகள் செவ்வியல் புனைவாகி, கவனத்தை ஈர்க்கின்றன. தேர்ந்த சொற்சேர்க்கை, வாசிப்பை சுவாரசியப்படுத்துகிறது.
காட்சியாக்கி, நெகிழ்ச்சியைத் தருகிறது. சமூகத்தின் சுழற்சியை நுட்பமாக பதிவு செய்கிறது. ஒன்று, நிறுத்தற் குறிகளாலான தலைப்பைக் கொண்டது. மற்றொன்று, கணித சூத்திர தலைப்பிலானது.
‘காபி’ என்ற கதையில்...
மாரிமுத்து எங்களை அழைத்துக்கொண்டு மூலை, பட்சணக் கடைக்கு போவான். காலணா கொடுத்தால், ஒரு சின்ன கோபுர பொட்டலம் நிறைய வெங்காய துாள் பகோடா தருவர். வெங்காயம் வறுபட்டு, கறுநீலமும், சிவப்புமாக – ஐயோ, என்ன ருசி! எங்களப்பா சாஸ்திரிகளாயிருந்தாராம்; அதனால் வெங்காயமே சமைக்கமாட்டாள் அம்மா.
அப்பா தான் இல்லையே... வானத்திலிருந்து பார்த்து கொண்டிருப்பாராம். துாள் பகோடாவில் சிக்கி, ஓடுகிற வெங்காயம் பிடிக்காத மனித ஜென்மம் இருக்குமோ... இப்படி, காட்சி மயமாக உள்ளது.
எளிய சொற்களை இணைத்து, அனுபவ ஆழத்தை உணர வைக்கின்றன கதைகள். ‘பூச்சி டயலாக்’ என்ற கதையில், ‘இது அதிசயம் இல்லை; சாகசம். உயிர் வாழ வேண்டும் என்ற உறுதி; உயிர் தத்துவத்தின் பிடிவாதம்’ என, நம்பிக்கையை துளிர்க்க வைக்கிறது.
ஒரு பயணத்தில், கடந்தவர்களையும், கடப்பதாக எண்ணி நின்று கொண்டிருப்பவர்களையும் இந்த படைப்பு வெளியில் காண முடிகிறது. கால ஓட்டத்தின் சாட்சியாக உள்ளது.
பதிப்பாசிரியர் சுகுமாரன், இந்த நுாலுக்கு, ஆவணங்களை கண்டுபிடித்த கடினப்பாதையை விவரித்துள்ளார். வாழ்வில் நெகிழ்வை ஏற்படுத்தும் அனுபவ சுரங்கம்.
– அமுதன்