கம்பராமாயணத்திற்கு இணையாகப் போற்றப்படும் பெருமை வாய்ந்த பக்தி இலக்கிய நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என, ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 135 படலங்களுடன், 10 ஆயிரத்து, 345 பாடல்களைக் கொண்டது. கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது.
முருகனின் தோற்றம், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படுதல், இளவயது திருவிளையாடல், சூரனை வதம் செய்தல், சூரனுக்கு அருள் வழங்கிய திறம், தெய்வானை மற்றும் வள்ளியை திருமணம் செய்து கொண்டது என, அனைத்தையும் எடுத்துரைக்கிறது. சிவன் பெருமைகளையும் மிகுதியாகக் கூறுகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய கந்தன், கந்த புராணத்தை எழுதச் சொன்னதாகவும், ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என, அடி எடுத்துக் கொடுத்ததாகவும் புராண வரலாறு தெரிவிக்கிறது. நாளும், 100 பாடல்கள் எழுதி, கந்தகோட்டம் முருகன் திருவடியில் கச்சியப்ப சிவாச்சாரியார் வைத்துவிடுவது வழக்கம்.
மறுநாள், கோவில் நடை திறக்கும் போது, அந்தப் பாடல்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு அருளியது முருகனே என்று, பக்தர்கள் போற்றுகின்றனர். இந்த நுால் அரங்கேற்றம் முடிந்ததும் கச்சியப்பரை பல்லக்கில் துாக்கி, காஞ்சி நகரம் முழுவதும் வலம் வந்து மரியாதை செய்துள்ளனர் பக்தர்கள். இந்த நுால் இயற்றப்பட்ட காலம், 11ம் நுாற்றாண்டு என, அறிய முடிகிறது.
ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவுரை, அருஞ்சொற்பொருள், குறிப்புரை என்ற அமைப்பில், தற்கால மொழிநடையில் உரை எழுதப்பெற்றுள்ளது. எல்லாரும் எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இந்த உரையுடன் கூடிய நுால் வரவேற்பைப் பெறும். பாடல்களைத் தடித்த எழுத்துகளில் அச்சிட்டு, தெளிவுரையை தெளிவான எழுத்துரு வடிவில் தந்து, எளிமையாக கற்கும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டோரும் விரும்பிப் படிக்கும் வகையில் எழில்மிகு பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 21ம் நுாற்றாண்டில் இத்தகைய முயற்சியை யாரும் இதுவரை மேற்கொண்டிருக்கவில்லை. பழந்தமிழ் இலக்கியங்கள் எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு, இந்த நுால் பதிப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
– முகிலை ராசபாண்டியன்