எம்.எல்.பிள்ளை, பூசைப்பிள்ளை, தமிழ்க்காசு என்ற பெயரிலும் போற்றப்பட்டவர் கா.சு.கா., காசு பிள்ளை என்ற கா.சுப்பிரமணிய பிள்ளை; அவரது கடைசி காலத்தில், ‘காசில்லாத காசு’ என்ற கேலிக்கும் உள்ளானவர். சைவம், சட்டம், இலக்கியம் என்ற அறிவுத் துறைகளில் காலம் முழுதும் இயங்கி வந்தார்.
இவரது ஆய்வு முறையை மூல முறை, ஒப்பீட்டு முறை, தருக்க முறை என பகுப்பார் பேராசிரியர் கருவை பழனிசாமி. தமிழுக்குப் பெருமை தேடியவர்; அதன் மேன்மையை நிறுவியவர்; தன்னலங்கருதாது உழைத்தவர்.
இவரது முதல் நுால், ‘உலகப் பெருமக்கள்’ என்ற தலைப்பில் சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தால், 1939ல் பதிப்பாக வெளிவந்தது. பின், நான்கு பதிப்புகளைக் கண்டது. இதன் இரண்டாம் புத்தகம், 1940ல் வெளிவந்து பல பதிப்புகளைக் கண்டது.
இவை ஒரே தொகுப்பு நுாலாக தற்போது வெளிவருகிறது. நாம் அறியாத ஆகாகான் முதல், நன்கறிந்த மகாத்மா காந்தி வரை, அரசியல் தலைவர்கள், நாடக ஆளுமைகள் என 15 பேர் பற்றி எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, துருக்கி, இங்கிலாந்து, அயர்லாந்து, ரஷ்யா, இத்தாலி, இந்தியா போன்ற நாடுகளில், அறிவாலும், திருவாலும், ஆற்றலாலும் சிறந்த பெருமக்கள் பலர் பற்றி இந்த தொகுப்பில் தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு வகையில் சிறந்தவராக உலகத்தாரால் மதிக்கப்படும்
பெருந்தலைவர்கள். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கொண்டுள்ளது இந்த நுால். பன்னாட்டுப் பெருமக்களுள் தலைசிறந்தவர்களின் வரலாறு என்பதே சிறப்புக்குரியது. இது அறிவுக்கு திறவுகோல். சமூக மக்களின் ஆளுமை வளர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோல். மனித நேயத்திற்கு ஒரு மந்திரக்கோல். சமூகத்திற்கு நற்பயன் விளைவிக்கவல்லது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்