ஒற்றை அஞ்சலட்டை ஆயிரம் கதைகளைச் சொல்லும். அவை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவை. ரகசியமற்று வெளிப்படையாக இருப்பது எவ்வளவு உற்சாகம் தரவல்லது என்பதை உணர்த்தும் அற்புத அடையாளம். அதில் எழுதிய அனுபவம் பற்றிய நுால்.
அஞ்சலகத்தில், ஒவ்வொரு முறையும் நுாறு அஞ்சலட்டைகளை வாங்குகிறார் ஆசிரியர். எதுவும் எழுதப்படாத அதன் மவுனத்தை, மணிக்கணக்கில் பார்த்துச் சிலாகிக்கிறார். பின்னொரு நாளில், அதில் கடிதம் எழுதுகிறார். பதில் இல்லை.
ஆயிரம் கதை சொல்லும் அஞ்சலட்டையில், ஒரு குறுங்கதை எழுதினால் என்ன எனத் தோன்றவே, அதை செயல்படுத்தி இருக்கிறார். அப்படி எழுதிய தொகுப்பே, இந்தப் புத்தகம்.
குளியலறை என்ற சொடுக்குக் கதை ஒன்றில், வீட்டில் தனித்திருக்கும் முதியவரின் அங்கலாய்ப்பு விவரிக்கப்பட்டுள்ளது. இது, தள்ளாமையின் வலியை உணர்த்தி கலங்க வைக்கிறது. இப்படி நிறைய கதைகளை உள்ளடக்கியது இந்தப் புத்தகம்.
– பெருந்துறையான்