நட்பு, பாசம், நம்பிக்கை, இழப்பு போன்ற குணங்களை பேசும் சிறுகதை நுால். பதினைந்து தலைப்புகளில் படைக்கப்பட்டு உள்ளது. ‘கடன்’ கதையில், கணவனை திடீரென பறிகொடுத்து, இரண்டு பிள்ளைகளுடன் வாழ்வை நகர்த்தும், காய்கறி விற்கும் வள்ளியின் பொருளாதார ஏமாற்றம் மனதுருகச் செய்கிறது.
பிறரின் நிலை அறிந்து உதவி செய்ய வேண்டும் என உணர்த்துகிறது. பிறரிடம் நான் எப்படி இருக்கிறேன்; யாராவது இதுபோல் நம்மிடம் நட்பில் இருக்கிறார்களா என, நட்பின் வீரியம் குறித்து அலசுகிறது.
கற்பனையாக இருந்தாலும், சமூக நடப்புகளை, மனித மனங்களை அசைபோட்டு விவரிக்கிறது. வாசிக்க துவங்கினால், நம்மை சுற்றி நடப்பதை மனதுக்குள் அலைபாய செய்யும். கதை, நாவல் எழுத துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்