நாட்டின் விடுதலை, மொழி உணர்வு, இலக்கியத் திறன், சீர்திருத்த கருத்து, இலக்கிய இலக்கண வளத்தை எடுத்துரைத்த அறிஞர் பெருமக்கள் என, 30 தகைசால் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
ஜாதி, மத கொடுமைகளுக்கு எதிராக சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பிய அயோத்திதாசர், தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி பயில்வதற்காக சென்னையில் இலவச பள்ளிகளைத் துவங்கிய நிகழ்வுகள் குறித்து தரப்பட்டுள்ளது.
எழுத்தராக வாழ்க்கையைத் துவங்கி துணைவேந்தராக உயர்ந்த டாக்டர் மு.வ., படைப்புகளின் தொகுப்பு, இலக்கியத் துறையில் ஆளுமையாக விளங்கிய பன்முக ஆற்றலாளர் தொ.மு.சி.ரகுநாதன் ஆய்வின் சிறப்பு, நாட்டுப்புற பாடல்களைச் சேகரித்துப் பதிப்பித்த வானமாமலை பற்றிய அரிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. சிந்திக்கவும், செயல்படவும், உயர் லட்சியத்துடன் வாழவும் துணை புரியும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்